தூத்துக்குடி, ஏப்.26:தூத்துக்குடியில் படகில் தூங்கிய மீனவர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி சுனாமி காலனி, தாய் நகரை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தங்கராஜ் என்ற ராஜா (25). சங்குகுளி மீனவரான இவர், திரேஸ்புரம் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் ேசர்ந்த சூசை ஸ்டாலின் மகன் சிலுவை ஆகாஷ்(23), மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் மரியதாமஸ் டினோ(22), கீழஅலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் மைக்கேல் ஜோவின்(20) ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திரேஸ்புரத்தைச் சேர்ந்த மேக்சன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மேக்சனுக்கும், கொலை செய்யப்பட்ட தங்கராஜூக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புரோட்டா கடையில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அன்று இரவு 8 மணிக்கு, இன்றிரவு முடிவதற்குள் உன்னை காலி செய்து விடுவேன் என்று, தங்கராஜ் என்ற ராஜா, மேக்சனை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதில் பயந்து போன மேக்சன் தனது நண்பர்களோடு சேர்ந்து முந்திக் கொண்டு தங்கராஜை தீர்த்துக் கட்டியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் மேக்சனின் நண்பர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post தூத்துக்குடியில் மீனவர் கொலையில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.
