எருமாடு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பந்தலூர் : பந்தலூர் அருகே எருமாடு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சேரங்கோடு ஊராட்சி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன் மற்றும் பள்ளி குடிமக்கள் மன்றம் ஆகிய சார்பில் பிளாஸ்டிக் பாதிப்பு மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷீஜா தலைமை தாங்கினார். சேரங்கோடு ஊராட்சி செயலாளர் சோனு ஷாஜி, ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி தனி அலுவலர் ஸ்ரீதரன் பேசும்போது, ‘‘பிளாஸ்டிக் பயன்பாடுத்தி அவற்றை பொது இடங்களில் போடுவதன் மூலமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு ஆங்காங்கே கழிவுகளை தேக்கி வைக்கும் சூழலும், அதனால் கொசு உற்பத்தி சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்கு சென்றாலும் சுமார் ஆயிரமாண்டுகள் அழியாமல் அப்படியே கிடக்கும்.

இதனால் நிலத்தடி நீர் பாதிப்புகள் ஏற்படுவதோடு விவசாயத்துக்கும், குடி நீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவுடன் முறையாக அப்புறப்படுத்துவதன் மூலம் பாதிப்புகளை குறைக்க முடியும் என்பதால் மாணவர்கள் முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவும். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும்’’ என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, ‘‘பிளாஸ்டிக் பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்து பயன்படுத்த துவங்கிய நம்மால் இன்று பிளாஸ்டிக் முழுமையாக தவிர்க்க இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது. பழைய நடைமுறைகள் படி துணிப்பைகளை அதிகமாக பயன்படுத்திக் கொள்வதும் அவசியம் ஆகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் அதில் உள்ள டையாச்சின், பாலி எத்திலீன், போன்ற இரசாயனகள் உடலில் கலந்து இரத்தத்திலும் தாய்ஒபாலிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்து உள்ளதோடு புற்றுநோய் அபாயங்களை ஏற்படுத்தியது. எனவே பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க முன்வர வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, சேரங்கோடு ஊராட்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் பேசும்போது, ‘‘பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக பழைய காலங்களில் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை மீண்டும் பயன்படுத்த முன்வரவேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் அக்கறை எடுத்துக்கொண்டால் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் முன் மாதிரி ஊராட்சியாக மாற்ற முடியும்.

மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி பள்ளி வளாகத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வளாகமாக மாற்ற வேண்டும். என்றார். இதைத்தொடர்ந்து, பள்ளிக்கு ஆல் தி சில்ட்ரன் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் சேகரிக்கும் குப்பை தொட்டி வழங்கப்பட்டது. அதேபோல் சேரம்பாடி, கையுண்ணி அரசு பள்ளிகளுக்கும் பிளாஸ்டிக் சேகரிக்கும் குப்பை தொட்டி வழங்கப்பட்டது.

The post எருமாடு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: