துணை நடிகையுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றிய நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு: மாம்பலம் போலீசார் விசாரணை

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி, துணை நடிகையுடன் குடும்பம் நடத்திய நடிகர் காதல் சுகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திரைப்பட நடிகர் சுகுமார் காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் படமே அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அதன் காரணமாகவே அவர் காதல் சுகுமார் என அழைக்கப்படுகிறார். தமிழ் திரை உலகில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என 2 திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த அந்த பெண், சில படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்த நிலையில் குழந்தையுடன் வசித்து வரும் அந்த நடிகைக்கும், காதல் சுகமாருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை காதலிப்பதாக கூறிய காதல் சுகுமார், தனியாக வீடு எடுத்து அந்த நடிகையுடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி அந்த நடிகையிடம் இருந்து நகை பணம் உள்ளிட்டவற்றையும் சுகுமார் வாங்கியுள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அந்த நடிகையுடன் சுகுமார் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவர் செல்போன் நம்பரையும் பிளாக் செய்து இருக்கிறார்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக பணம், நகை உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டு தன்னிடம் பேசாதது ஏன் என நடிகை கேட்டதற்கு, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என சுகுமார் கூறியிருக்கிறார். அப்போது தான் அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்தது. எனவே, தன்னை ஏமாற்றிய நடிகர் சுகுமார் மீது அந்த நடிகை காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதமே புகார் அளித்தார்.

இந்நிலையில் புகார் கொடுத்து மூன்று மாதங்களுக்கு பிறகு காதல் சுகுமார் மீது சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்த போது, வாங்கிய பணத்தை திருப்பித் தருவதாக கூறி நடிகர் சுகுமார் செக் வழங்கி இருக்கிறார்.

ஆனால் வங்கியில் காசோலையை செலுத்திய நிலையில் அது பணம் எதுவும் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டதாக துணை நடிகை மீண்டும் புகார் அளித்தார். இதையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காதல் சுகுமாரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்குப் பிறகு கைது நடவடிக்கையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post துணை நடிகையுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றிய நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு: மாம்பலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: