புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் அனுமதி அளித்ததுடன், மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாலும் கூட 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. துணைஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இதை விமர்சித்து பேசினார். இப்போது பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபேயும் இதுபற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டுமானால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளை மூடிவிடலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் நாடாளுமன்றத்தின் சட்டமன்ற அதிகாரங்களை நீதிமன்றம் தனக்குத்தானே பறித்துக்கொண்டுள்ளது. சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் வேலை. நீதிமன்றத்தால் அரசுக்கு உத்தரவிட முடியும். ஆனால் நாடாளுமன்றத்திற்கு அல்ல. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்ற வேண்டுமானால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்: பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.