ரூ.6 ஆயிரம் கோடி மோசடி வழக்கு நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

மதுரை: முதலீட்டாளர்களிடம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்த நியோமேகஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதன் அலுவலகங்கள் செயல்பட்டன. முதலீடு செய்தால் 12 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் மூன்றாண்டுகளில் முதலீட்டு தொகை இரு மடங்காக திரும்ப வழங்கப்படுவதாகவும் ஆசை வார்த்தை கூறப்பட்டது. இதை நம்பி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு கூறியபடி உரிய பணம் திருப்பித்தரவில்லை. எனவே, பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியதாக இந்நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் குவிந்தன. ரூ.6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக புகார் தரப்பட்டது. இதன்பேரில் நியோமேக்ஸ் நிறுவனம் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டு, 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நியோமேக்ஸ் நிறுவனத்தின் கீழான 17 கிளை நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டன. இவ்வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்து வருகிறது.

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. பல ஆயிரம் கோடி மோசடி புகாருக்கு ஆளான நியோமேக்ஸ் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன் என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போது சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ரூ.600 கோடி மதிப்பு சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஏற்கனவே, 752 வங்கிப் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.600 கோடி மதிப்பு அசையும், அசையா சொத்துகளும் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.30 கோடி சொகுசு ரிசார்ட் முடக்கம்: கொல்கத்தா மாநிலத்தை தலைமையாகக் கொண்டு டி.எம் டிரேடர்ஸ் மற்றும் கே.கே டிரேடர்ஸ் (டி.பி. குளோபல் எஃப்.எக்ஸ், டிபி குளோபல் பிக்ஸ்) எனும் 2 தனியார் நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்களை பிரசென்ஜித் தாஸ், துஷார் படேல் மற்றும் ஷைலேஷ் குமார் பாண்டே ஆகியோர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிறுவனங்கள், அந்நிய செலவாணி வர்த்தக முதலீடுகளில் அதிக வருமானம் பெற்று தருவதாக கூறி ஏராளமான முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. இதன்மூலம் பல கோடி ரூபாய் வருமானத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த சூழலில் இந்நிறுவனமானது தங்களை ஐஎக்ஸ் குளோபல் என்ற நிறுவனத்தின் பார்ட்னர்கள் என கூறி விளம்பரம் செய்துள்ளது. மேலும், இதன்மூலமும் இந்நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்துக்கள் குவிந்துள்ளன. இதையடுத்து ஐஎக்ஸ் குளோபல் நிறுவனம் தங்களது பெயரை தவறாக பயன்படுத்தி, டி.பி. குளோபல் எஃப்.எக்ஸ், டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனங்கள் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து இந்நிறுவனம், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், கொல்கத்தா பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த 2022ம் ஆண்டு துவக்கத்தில் புகாரளித்தனர்.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 2 நிறுவனங்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனங்களில் விசாரணை மற்றும் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். மோசடி செய்த பணத்தின் ஒரு பங்கில் ராமேஸ்வரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையின் சோதனையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அருகேயுள்ள 60 அறைகள் கொண்ட சொகுசு தங்கும் விடுதி மற்றும் அதனருகே உள்ள நிலம் உள்ளிட்டவற்றை மோசடி செய்த பணத்தில் வாங்கிய சொத்துக்களாக அமலாக்கத்துறை கடந்த 2023ம் ஆண்டு வழக்கில் சேர்த்தது.

தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவை கொல்கத்தா அமலாக்க பிரிவு உத்தரவிட்டது. இதையெடுத்து ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான 60 அறைகள் கொண்ட செவன்ஹில்ஸ் ரிசார்ட் மற்றும் அதன் அருகே உள்ள நிலம் ஆகியவற்றை கொல்கத்தா அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக ஏப்ரல் முதல் வாரத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரிசார்ட் இயங்கி வந்த நிலையில், கொல்கத்தா அமலாக்கப்பிரிவு ரிசார்ட்டை பூட்டி சீல் வைத்தனர்.

The post ரூ.6 ஆயிரம் கோடி மோசடி வழக்கு நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: