சட்டப்பேரவையில் நேற்று, மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட குழுவினை அமைத்து, 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஓர் உயர்மட்ட குழு அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அதனை வரவேற்றும், பாராட்டியும், வாழ்த்தியும் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியபோது, 1974ம் ஆண்டு, அன்றைக்கு முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் சட்டமன்றத்தில் பேசிய உரையை புத்தகமாக அச்சிட்டு, உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்.
நல்ல யோசனை. ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கை குறிப்பு புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், அவர் இந்த அவையிலே அதை கோரிக்கையாக வைத்திருக்கிற காரணத்தால், நிச்சயமாக, உறுதியாக புத்தகமாக அச்சிடப்பட்டு மீண்டும் வழங்கப்படும். அதிமுகவினர் இதில் கலந்துகொள்ளாமல், தங்கள் கருத்துகளைச் சொல்லாமல் சென்றுவிட்டார்களே என்ற வருத்தம், கவலை எனக்கு இருக்கிறது. காரணம் என்னவென்றால், அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆர் இருந்தபோதும் சரி, ஜெயலலிதா இருந்தபோதிலும் சரி, என்னதான் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் கருத்து மாறுபடுகளும், வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தர முடியாது என்ற நிலையில் இருந்து, மக்களுக்கான கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஆனால், இன்றைக்கு என்ன சூழல் என்று புரியவில்லை. அது நமக்கு புரியும். ஆனால், கொள்கை வேறு; கூட்டணி வேறு என்று அவர்கள் சொல்வார்கள். அதைத்தான் தற்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். ‘இதுதான் கொள்கையா?’ என்கிற கேள்வியைதான் நாம் கேட்க வேண்டியிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் நன்மையைக் கருதி, மக்களின் உரிமைகளை கருதி, நான் அவர்களிடம் வைக்கக்கூடிய கோரிக்கை, தமிழ்நாட்டின் உரிமைகள் என்று வரும்போது, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து, ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும். இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு, அந்த பணியில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையோடு, அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழ்நாட்டின் நன்மை, மக்களின் உரிமைகளை கருதி கட்சி வேறுபாடு அனைத்தையும் கடந்து ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும்: அதிமுகவுக்கு முதல்வர் கோரிக்கை appeared first on Dinakaran.