மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

*காவல்நிலையம் முற்றுகை-சாலை மறியலால் பரபரப்பு

மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சீயப்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த மகள் திலகவதி (17) திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
இதுகுறித்து தகவலறிந்த மேல்மலையனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இறந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேல்மலையனூர் காவல் நிலையத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை முற்றுகையிட்டு பெண்ணின் இறப்புக்கு காரணமான நபரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகபிரியா சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் உறவினர்கள், மாணவியின் உடலை வாங்க மறுத்து பெண்ணின் இறப்புக்கு காரணமான அதே கிராமத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்யக்கோரி கிருஷ்ணகிரி-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலபாடி கிராமத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: