சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2025ம் ஆண்டிற்கான ‘சிறந்த திருநங்கை விருதினை’ ரேவதி மற்றும் பொன்னி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘சிறந்த திருநங்கை விருது’ அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு குழுவால் தேர்வு செய்யப்படும் இந்த விருதாளருக்கு, திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ம் நாளில் (நேற்று) விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த விருதினை பெறுபவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள காசோலையும், அவர்களது சேவை மற்றும் சாதனைகளை பாராட்டும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை அ.ரேவதியின் சிறந்த சமூக சேவையை பாராட்டியும், திருநங்கைகள் தங்களது அயராத முயற்சியால் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை க.பொன்னியின் சிறந்த சமூக பங்களிப்பை பாராட்டியும், தமிழ்நாடு அரசின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.
The post திருநங்கைகள் ரேவதி, பொன்னி ஆகியோருக்கு 2025ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.