அறுவடை செய்யப்படும் நெல்லை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்ய உணவு வழங்கல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொள்முதல் செய்து குடோனில் வைத்து அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நெல்லை கொள்முதல் செய்யும் அதிகாரிகளுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை வாங்குவது இயல்பு. விவசாயிகளுக்கு அதற்கான பணத்தையும் கொடுத்து விடுவார்கள். மேலும் நெல்லை எடைபோடும் ஊழியர்களுக்கான சம்பளத்தையும் விவசாயிகளிடமே வாங்கி கொடுப்பதும் வழக்கம்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், பூதூர் அருகில் உள்ள ஈசூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்து காய வைத்து நெல்லை மைதானங்களில் வைத்துள்ளனர். மேலும் திடீரென கோடை மழை பெய்வதால் தார்பாய் போட்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். நெல் நன்றாக காய்ந்து 10 நாட்கள் ஆன நிலையில் ஈசூரில் நெல் கொள்முதல் செய்வதற்கான இயந்திரங்களும் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மூட்டைக்கு ரூ.50 கொடுத்தால் தான் கொள்முதல் செய்ய முடியும் என்று உணவு வழங்குதல் துறை அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக கூறப்படுகிறது. அதற்கு விவசாயிகள் பக்கத்து ஊர்களில் கொடுப்பது போல் எடை போடும் ஊழியர் சம்பளம் மற்றும் மூட்டைக்கு ரூ.10 முதல் ரூ.15 தருகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால், ஈசூரில் அதிகாரி மட்டும் மூட்டைக்கு ரூ.50 ெகாடுத்தால் தான் கொள்முதல் செய்வோம் என நிறுத்தி வைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
நெல் திருட்டு போய்விடும் என்பதால் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் இரவு, பகலாக குடும்பத்துடன் மைதானங்களில் காத்துக்கிடக்கின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று புலம்புகின்றனர். இதனால் ஈசூர் விவசாயிகள் நெல்லை அரசிடம் விற்பனை ெசய்ய கடந்த 10 நாட்களாக தவித்து வருகின்றனர். எனவே உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தலையிட்டு நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழை எப்போதும் வரும் என்று அச்சத்தில் உள்ளனர்.
The post நெல் கொள்முதல் செய்ய மூட்டைக்கு ரூ.50 கேட்டு அதிகாரிகள் கெடுபிடி: ஈசூரில் தேங்கிக்கிடக்கும் மூட்டைகள் appeared first on Dinakaran.