நாஞ்சிக்கோட்டை சாலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஆபத்து

தஞ்சாவூர், ஏப்10: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் இருந்து நாஞ்சிக்கோட்டைக்கு பிரதான சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், வேளாண் துறை அலுவலகங்கள், மாவட்ட தொழில் மையம், உழவர் சந்தை, தோட்டக் கலை அலுவலகம் மற்றும் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.

மேலும், இந்த சாலை வழியாக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பஸ்கள் ஒரத்தநாடு, திருவோணம் வழியாக பட்டுக்கோட்டைக்கும், கறம்பக்குடி, பாச்சூர், ஆத்தங்கரைப்பட்டி, புதுக்கோட்டை விடுதி, குறுங்குளம், வேங்கராயன் குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாஞ்சிக்கோட்டை வரை பல்வேறு ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை சாலையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் மாடுகள் வளர்த்து வருகின்றனர். அதில் சில மாடுகள் சாலையோரங்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்கள் பட்டியில் அடைக்க வேண்டும்.

இல்லாவிடில் மாடுகளை பறிமுதல் செய்து, மாட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாஞ்சிக்கோட்டை சாலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஆபத்து appeared first on Dinakaran.

Related Stories: