இதில், ராணா 2009ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு பொருள் உதவி செய்ததாக அமெரிக்காவின் சிகாகோவில் எப்பிஐயால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர நீண்டகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, அமெரிக்காவில் குற்றவாளிகளுக்கு கிடைக்கக் கூடிய அத்தனை சட்ட வாய்ப்புகளையும் ராணா இழந்து விட்டார். தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தாக்கல் செய்த மனுக்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை சந்திக்க அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது இரு தலைவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், ராணா அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். இதற்காக டெல்லியிலிருந்து சென்ற தனி விமானம் மூலம் பல்வேறு விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த குழுவினர் ராணாவை இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர். இந்த விமானம் இன்று காலை டெல்லியை வந்தடையும் என கூறப்படுகிறது. ராணா டெல்லி திகார் அல்லது மும்பை சிறையில் அடைக்கப்படலாம் என தெரிகிறது.
பாகிஸ்தானின் சதியை அம்பலப்படுத்த உதவும்
ராணா நாடு கடத்தப்படுவது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில், ‘‘2008ல் தாக்குதலுக்கு முன்பாக ராணா இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்துள்ளார். இதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதே போல, தாக்குதல் நடந்த அத்தனை இடங்களுக்கும் மற்றொரு குற்றவாளி ஹெட்லி பயணம் செய்துள்ளார். ராணாவிடம் விசாரிப்பது, இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்த உதவும்’’ என்றனர். மும்பையில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்கான ஆயுதங்கள், நிதி மற்றும் பிற உதவிகளை ராணா வழங்கியிருப்பதாக என்ஐஏ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சங்கர், அஜித்தோவலுடன் அமித்ஷா அவசர ஆலோசனை
மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார் என்ற தகவல் அடிப்படையில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது ஐ.பி இயக்குநர் தபன் டேகா மற்றும் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
The post மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி; ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்: தனி விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார் appeared first on Dinakaran.