பிரான்சிடம் இருந்து ரூ.64,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்புதல்: ஒன்றிய அமைச்சரவை முடிவு

புதுடெல்லி: பிரான்சிடம் இருந்து ரூ.64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை வகை ரபேல் போர் விமானங்களை வாங்கி ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்திய கடற்படைக்காக பிரான்சிடம் இருந்து ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பில் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 22 ஒற்றை இருக்கை ரக ரபேல் விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரபேல் விமானங்களும், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதி கொண்டவையாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வரும் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரபேல் கடற்படை போர்விமானங்களும், ஆயுத அமைப்புகளும், உதிரிபாகங்கள் உள்ளிட்ட துணை உபகரணங்களும் பெறப்படும். ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு விமானங்களின் விநியோகம் தொடங்கும். ரபேல் விமானங்கள், விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் நிலைநிறுத்தப்படும்.
ஏற்கனவே பிரான்சிடமிருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டு அவை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

The post பிரான்சிடம் இருந்து ரூ.64,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்புதல்: ஒன்றிய அமைச்சரவை முடிவு appeared first on Dinakaran.

Related Stories: