மும்பை: ஒன்றிய அரசின் புதிய பணி நேர விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்கள். இந்நிலையில் நேற்றும் நிறுவனத்தின் 422 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஒன்றாம் தேதி முதல் மிகப்பெரிய அளவில் விமான இடையூறுகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து இண்டிகோவின் விமான சேவை அட்டவணையை 10 சதவீதம் (200 விமான சேவைகள்) குறைத்துள்ளதாக விமான பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ளது. அதிக தேவை உள்ள , அதிக சேவைகள் கொண்ட வழித்தடங்களில் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளது. உடனடியாக திருத்தப்பட்ட அட்டவணையை சமர்ப்பிக்கவும் இண்டிகோவை டிஜிசிஏ அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் அனுப்பிய சமீபத்திய வீடியோ செய்தியில், ‘‘விமானங்கள் ரத்து செய்யப்பட்ட அல்லது தாமதமான லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்களது முழு பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
இந்த செயல்முறை தொடர்ந்து நடந்து வருகின்றது. இண்டிகோ மீண்டும் தனது நிலையை அடைந்துள்ளது. மேலும் எங்களது செயல்பாடுகள் நிலையானவை. ஒரு பெரிய செயல்பாட்டு இடையூறு ஏற்பட்டதால் நாங்கள் உங்களை ஏமாற்றிவிட்டோம். அதற்காக நாங்கள் வருந்துகிறோம். டிசம்பர் 9ம் தேதி நிலவரப்படி எங்களது செயல்பாடுகள் முழுமையாக நிலைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை என்னால் இப்போது உறுதிப்படுத்த முடியும்.
திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்க முடியவில்லை. அதற்காக நாங்கள் மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விமான நிலையங்களில்சிக்கிய பெரும்பாலான உடைமைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ளவையும் விரைவில் வழங்குவதற்கு எங்கள் குழுக்கள் கடினமான உழைத்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
* அரசு உடந்தை
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகளில் ஏற்பட்ட பெருமளவிலான இடையூறுகளுக்கு ஒன்றிய அரசு உடந்தையாக இருக்கின்றது. இந்த முழு நிகழ்வும் ஒருபெரிய ஊழல். ஏதோ தீவிரமாக தவறு நடந்துள்ளது.இந்திய அரசு திறமையற்றதாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு அரசை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை. இதற்கு அரசு உடந்தையாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்த விசாரணை, குழு இவை அனைத்தும் நம்மை முட்டாளாக்குகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய மோசடியாகும்” என்றார்.
* இண்டிகோ பொறுப்பேற்க வேண்டும்
மக்களவையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசுகையில், ‘‘திட்டமிடல் தோல்விகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதன் மூலம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதற்கு எந்த விமான நிறுவனமும் அனுமதிக்கப்படாது. நாடு முழுவதும் பயணிகளை பாதித்த விமான இடையூறுகளுக்கு இண்டிகோ மீது கடுமையான மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இண்டிகோ அதன் சேவையில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.
