மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’: தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

 

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘நாடு இப்போது முழுமையான சீர்திருத்த எக்ஸ்பிரஸ் கட்டத்தில் உள்ளது. சீர்திருத்தங்கள் விரைவாகவும் தெளிவான நோக்கத்துடனும் நடைபெற்று வருகின்றன. அரசின் சீர்திருத்தங்கள் முற்றிலும் குடிமக்களை மையமாக கொண்டவையாகும்.

சீர்திருத்த எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து அன்றாட கஷ்டங்களை நீக்கும் வகையில், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளை எம்பிக்கள் தீவிரமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தமானது பொருளாதாரம் அல்லது வருவாயை மையமாக கொண்டவை அல்ல. மக்கள் தங்கள் முழு திறனுடன் வளருவதற்கு தேவையான அவர்களின் அன்றாடத் தடைகளை நீக்குவதே இதன் குறிக்கோளாகும்.மூன்றாவது முறையாக மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே எனதுஅரசின் முன்னுரிமையாக இருக்கும்.

எந்த சட்டமும் எந்தவொரு குடிமகனுக்கும் சுமையாக இருக்கக்கூடாது. விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எப்போதும் மக்களின் வசதிக்காக இருக்க வேண்டும்.  30-40 பக்க படிவங்கள் மற்றும் தேவையற்ற காகித வேலைகளின் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். குடிமக்களின் வீட்டு வாசலில் சேவைகளை வழங்க வேண்டிய தேவை உள்ளது.

மீண்டும் மீண்டும் தரவுகளை சமர்ப்பிக்கும் முறைகளை அகற்ற வேண்டும். சுயசான்றிதழை அனுமதிப்பதன் மூலம் அரசு குடிமக்களை நம்புகிறது. இது 10 ஆண்டுகளாக தவறாக பயன்படுத்தப்படாமல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. வாழ்க்கை எளிமை மற்றும் வணிகம் செய்வதில் எளிமை ஆகிய இரண்டும் எனது அரசின் முதன்மையான முன்னுரிமைகளாக இருக்கும்” என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர கிரண் ரிஜ்ஜூ, ‘‘பிரதமர் மோடி எம்பிக்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கினார். நரேந்திர மோடி அரசின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ் நகரத் தொடங்கியுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். அது நிற்காது. இந்த சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் மாற்றுவதற்கானது. இந்த சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை குறிப்பதாகும்” என்றார்.

Related Stories: