ரேஷன் கடைகளில் பெண்களுக்கு கழிப்பறை

*இசக்கி சுப்பையா எம்எல்ஏ கோரிக்கை

சென்னை : ரேஷன் கடைகளில் பெண்களுக்கு கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா கோரிக்கை வைத்தார்.சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா (அதிமுக) பேசியதாவது:

ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது வழக்கமான பணியை தவிர, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு அளிக்கும் பணியினை மேற்கொள்கின்றனர். இதேபோன்று, இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, நியாயவிலை கடைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது.

இனி வருங்காலங்களில் கூடுதல் வேலைப்பளு ஏற்படும்போது, ஒரு கார்டுக்கு ரூபாய் 5 என்ற வீதத்தில் தர வேண்டும். பெரும்பாலான நியாய விலை கடைகள் பழுதடைந்த கட்டிடங்களில் செயல்படுகிறது. அங்கு கழிப்பறை வசதி இல்லை. இதன் காரணமாக மகளிர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அனைத்து நியாய விலை கடைகளிலும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.

அமைச்சர் அர.சக்கரபாணி: நியாய விலை கடைகளில் பெண்கள் வேலை பார்க்கிறார்கள், கழிப்பறை வசதி வேண்டுமென்று நீங்கள் சொன்னீர்கள். இப்போது கட்டப்படுகின்ற அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கழிப்பிட வசதி இருக்க வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இசக்கி சுப்பையா: கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்த ஊதியம்தான் அளிக்கப்படுகிறது. அவர்கள் குடும்பம் நடத்தவே சிரமப்படுகிறார்கள். ஓய்வுபெற்ற பிறகு, மருத்துவச் செலவிற்குக்கூட பிறரின் உதவியை நாடக்கூடிய நிலைமை உள்ளது.

தங்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென்று கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கோரி வருகிறார்கள். இந்த கோரிக்கையை, அரசு நிறைவேற்ற வேண்டும். பணி நேரம் முடிந்த பின்னர் வேலை வாங்குவது, விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்தக்கூடாது.

அமைச்சர் பெரியகருப்பன்: உறுப்பினர் எழுதி வைத்துக் ெகாண்டு பேசுகிறார்.

இசக்கி சுப்பையா: தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் பார்த்து படித்துக் கொண்டிருக்கிறோம்.

அமைச்சர் துரைமுருகன்: இசக்கி சுப்பையா பேசுவதில் ஒன்றுமில்லை. ஆனால், இந்த சபையில் யாரும் படிக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய ரூலில் இருக்கிறது. நாங்கள் எல்லாம் இருக்கிற காலத்தில் அப்படியிருந்தது. ஒருமுறை நான் சொல்வது, பேனல் ஆப் சேர்மர் ஜோதியம்மாள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

குடியாத்தம் எம்எல்ஏ 3 மணி நேரம் பேசுவார். அதை கடைசி இருக்கையில் உட்கார்ந்து, இப்படி குறிப்பை கையில் வைத்துக் கொண்டு வைத்து பேசினார். அந்த அம்மையார் சொன்னார்கள், அவர் எழுதி வைத்து படிக்க முடியாது, அந்த காகிதத்தை என்னிடம் கொடுங்கள் என்று அம்மையார் சொன்னார்.

அதை வாங்கிப் பார்த்து அது குறிப்பு என்று தெரிந்த பிறகுதான் விட்டார்கள். அப்படிப்பட்ட சிஸ்டம் இருந்த காலம். ஆனால், தற்போது அப்படியே மொத்தமாக மாறி இப்போது படிப்பதை தவிர யாரும் பேசுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாகிவிட்டது.

ஆகையினால், யாரையும் கட்டுப்படுத்த முடிவதில்லை. நீங்கள் படியுங்கள்.சபாநாயகர் அப்பாவு: பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் 1996ல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது, பேப்பர் வைத்துக் கொள்ளவிட மாட்டார். அப்படித்தான் எல்லோரும் பேசினோம்.

இசக்கி சுப்பையா: இனி வருங்காலங்களில் நாங்கள் அனைவரும் அப்படிச் செய்ய முயற்சிக்கிறோம். 2018ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாக குழு உறுப்பினர்கள் மே மாதம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இதன்படி, 2023ம் ஆண்டு மே மாதத்துடன் இவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. எந்த பிரிவின் அடிப்படையில் செயலாட்சியர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடத்த வேண்டும்.

அமைச்சர் பெரியகருப்பன்: தேர்தல் நடத்த வேண்டுமென்றால், உறுப்பினர்கள் உண்மையான உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில் நடத்திய தேர்தலை பார்த்தீர்களென்றால், 2 கோடியே 46 லட்சத்து, 14,949 உறுப்பினர்கள் இருந்தார்கள் என்று கணக்கு வைத்திருந்தார்கள். அந்தக் கணக்குகளை ஆய்வு செய்து பார்த்தபொழுது, பாதிக்கு பாதி போலி உறுப்பினர்கள்.

அதில் சுமார் 25 லட்சம் உறுப்பினர்கள் அளவில் இறந்த உறுப்பினர்கள். உச்ச நீதிமன்றம் இதுகுறித்து என்ன சொல்லியிருக்கிறது என்றால், முறையான உறுப்பினர்களை கண்டறிந்து, அவர்கள் உண்மைதானா என்பதை நிரூபிப்பதற்கு ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை அதில் இணைக்க சொல்லியிருக்கிறது. அந்த பணிகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தலை கண்டு அஞ்சுகின்ற இயக்கம் இந்த இயக்கமல்ல.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post ரேஷன் கடைகளில் பெண்களுக்கு கழிப்பறை appeared first on Dinakaran.

Related Stories: