கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 781 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூர், ஏப்.9: பெரம்பலூரில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 781 பேருக்கு ரூ.34.05 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எல்லாத் துறைகளும் மிகப்பெரிய மாற்றமும், ஏற்றமும் கண்டு வருகிறது. ஒவ்வொரு திட்டங்களும், நடவடிக்கைகளும் தமிழ்நாட்டை கடந்து பல்வேறு மாநிலங்கள் பின்பற்றக்கூடிய, பாராட்டக்கூடிய அளவில் உள்ளது. சில திட்டங்கள் நாடு கடந்து பாராட்டு பெற்று வருகிறது. தொழிலாளர் நல வாரியத்தில் சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக இணைந்துள்ளனர். தொழிலாளர் நல வாரியத்தின் சார்பாக வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, ஓய்வூதியம் என அனைத்து உதவித்தொகைகளும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரில் உள்ள அனைவருக்கும் வீடு கட்டி தரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் 300 சதுர அடி உள்ளவர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் திட்டம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, கட்டுமான தொழிலாளர்கள் வேறு மாவட்டத்தில் கட்டுமான பணிக்குச் சென்று இறந்து விட்டால் சொந்த மாவட்டத்திற்கு எடுத்து வர செலவின உதவித்தொகை, கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கே சென்று மருத்துவ உதவிகள் செய்யும் வகையிலான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 57,894 நபர்கள் உறுப்பினர்களாகவும், அமைப்புசாரா வாரியத்தில் 17,006 நபர்களும், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் தானியங்கி நல வாரியத்தில் 3,064 உறுப்பினர்கள் என 77,964 நபர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இவ் உறுப்பினர்களுக்கு 1.4.2024 முதல் 31.3.2025 வரை அதாவது கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்க ஓய்வூதியம் ஆகிய நிதி உதவி திட்டத்தின் கீழ் 27,632 நபர்களுக்கு 13.48 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 781 பயனாளிகளுக்கு ரூ.34,05,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்களின் பாதுகாப்பினை கருதி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் தொழிலாளர் நல வாரியத்தில் விதிமுறைகளை திருத்தி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் 656 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.17,42,600மும், 50 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.9,81,000 மும், 11 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித் தொகையாக ரூ.6,05,000மும், 64 ஓய்வூதிய உதவித்தொகையாக ரூ.76,,800 மும், என மொத்தம் 781 பயனாளிகளுக்கு 34,05,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் வழங்கினார்.அவருடன் தொழிலாளர் உதவி ஆணையர், (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், தொழிலாளர் உதவி ஆணையர், (அமலாக்கம்), மூர்த்தி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 781 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: