சம ேவலை, சம ஊதியம் வலியுறுத்தி பெரம்பலூரில் 5வது நாளாக செவிலியர் போராட்டம்

பெரம்பலூர், டிச. 23: செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக 5வது நாளாகக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. எம்.ஆர்.பி எனப்படும் செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக, அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல் முறையீட்டை கைவிட்டு விட்டு செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.

செவிலியர் கண்காணிப்பாளர் நிலை- 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலிகளுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். பட்டப் படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு 5வது நாளாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்த் கோரிக்கை விளக்கவுரை பேசினார்.

பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத் தலைவர் குமரி ஆனந்தன், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். பெரம்பலூர் சாலை ஆய்வாளர் சங்கத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கம், சாலை பணியாளர் நலச் சங்கம் சார்பிலும் பேசினர். முடிவில் முத்துக்குமார் நன்றி தெரிவித்தார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: