பெரம்பலூர்,டிச.24: பெரம்பலூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டைத் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த ராஜ். இவர் தனது வயலில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை நேற்றுமுன்தினம் மாலை காணவில்லை என்று பல இடங்களில் தேடிப் பார்த்து கிடைக்காத நிலையில், நள்ளிரவு தனது கிணற்றுக்குள் இருந்து பசு மாட்டின் சத்தம் வரவே, ராஜ் பெரம்பலூரில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பெரம்பலூரில் இருந்து தீயணைப்புத் துறையினர், உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் நேற்று 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசு மாட்டினை தீயணைப்புத் துறை வீரர்களின் உதவியுடன் பொதுமக்களுடன் சேர்ந்து 2மணிநேர போராட்டத்திற்குப் பிறகு பசு மாட்டினை உயிருடன் மீட்டு உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர்.
