பாடாலூர், ஜன. 1: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை ஊராட்சியில் மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி செலவில் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் க.அடி நீர் தேக்கும் வகையில் கொட்டரை நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 2,360 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில், 2 பாசன மதகுகள் உள்ளன. 9.91 கி.மீ. நீளம் கொண்ட, இடதுபுற கால்வாய் மூலம் 3,188 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும், 6.73 கி.மீ. நீளம் கொண்ட வலதுபுற கால்வாய் மூலம் 1,006 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் 4830.38 டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் இடது புற கால்வாய் வழியாக கொட்டரை, ஆதனூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டப்பாடி, அழகிரிபாளையம் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளுக்கும், வலதுபுற கால்வாய் மூலம் கொட்டரை, ஆதனுார், கூடலூர் மற்றும் சாத்தனூர் ஆகிய பகுதிகளும் பயன் பெறுகின்றன. கொட்டரை, ஆதனூர், சாத்தனூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், கூத்தூர், அழகிரிபாளையம், தொண்டப்பாடி, பிலிமிசை ஆகிய 9 கிராமங்கள் 4,194 ஏக்கர் பரப்பளவில் விவசாய பாசனம் பெறும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் கொட்டரை அணையில் தண்ணீர் நிரம்பும்போது, அருகில் உள்ள நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் ஆடு, மாடுகளை ஓட்டி செல்ல முடியவில்லை என்றும், சிறிய பாலம் அமைத்தால் நடந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றும் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மிருணாளினியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி நேற்று கொட்டரை நீர்த்தேக்க பகுதியில் கலெக்டர் மிருணாளினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கொட்டரை நீர்த்தேக்கம் அருகே விவசாய நிலத்திற்கு அமைக்கப்பட்ட தற்காலிக பாதைகளை, சிறிய பாலம் அமைப்பதற்காக பாதை வசதிகள் இருக்கிறதா என்பதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் பாலம் அமைப்பது குறித்து, கிராம மக்களிடம் கலெக்டர் கருத்துக்கள் கேட்டார். பின்னர் அரசு விதிகளுக்குட்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொட்டரை விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார்.
