தேன்கனிக்கோட்டை, ஏப்.8: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கும்ளாபுரம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மூன்று யானைகள் கடந்த ஒரு வார காலமாக ஊருக்கு அருகே முகாமிட்டவாறு, விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. குறிப்பாக தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், சாமந்தி உள்ளிட்டவற்றை குறி வைத்து சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு ஆறுப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த யானைகள், அப்பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்தன. அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை அடியோடு சாய்த்து வாழைத்தார்களை ருசித்து பந்தாடி விட்டு சென்றுள்ளன.
இதேபோல், சதீஷ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், சுமார் இரண்டரை ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வெள்ளரிக்காய்களை தின்று நாசம் செய்துள்ளன. மேலும், நாராயணன் என்பவரது தோட்டத்தில் சுரைக்காய்களை பறித்து சந்தைக்கு கொண்டு செல்வதற்காக 20 மூட்டைகளில் கட்டி வைத்திருந்தனர். அதனை மோப்பம் பிடித்தவாறு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், மூட்டைகளை பிரித்து காய்களை சாப்பிட்டு விட்டு சென்றுள்ளன. அப்போது, சுரைக்காய் கொடிகளையும் நாசப்படுத்தியவாறு யானைகள் ஓட்டம் பிடித்துள்ளன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்றவர்கள் சுரைக்காய்கள் மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். மூட்டைகள் அனைத்தும் காலியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.
யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்தாலும், வனத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தளி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டவாறு அட்டகாசம் செய்யும் யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாழை தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.