வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது: ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ராமநாதபுரம்: வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது என பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, நேற்று பிற்பகல் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆலயம் விடுதியில் நடந்த நலத்திட்ட விழாவில் பங்கேற்றார். இவ்விழாவில் ரூ.8,300 கோடி மதிப்பில், தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் பிரதமர் மோடி தமிழில் ‘வணக்கம்’ என்று சொல்லி, சகோதர, சகோதரிகள் என பேச்சை தொடங்கினார்.

அவர் பேசியதாவது:அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ராமநவமி நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் ரூ.8,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ராமேஸ்வரம் பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பூமி. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்று அவரது வாழ்க்கை நமக்கு காட்டுகிறது. ராமேஸ்வரத்தின் இந்த புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பத்தையும் பாரம்பரித்தையும் ஒன்று சேர்க்கிறது. பாம்பன் புதிய பாலத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

இந்த ரயில் பாலம்தான், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். இதற்கடியிலே பெரிய கப்பல்களும் பயணத்தை மேற்கொள்ள முடியும். ராமேஸ்வரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு இடையிலான இணைப்பினை இந்த பாலம் ஏற்படுத்துவதுடன், தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு பயனுள்ளதாக அமையும். வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்து, இந்தியாவின் வளர்ச்சியும் விரைவாகும்.

முன்பிருந்த அரசை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிகளவில் உதவி புரிந்துள்ளது. மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவ படிப்பினை தமிழில் படிக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் பேராசை. அதற்காகத்தான் மருத்துவ படிப்பினை கூட தமிழிலே வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதன் பொருட்டு நான் வேண்டி விரும்பி தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசு மீனவர்களின் அனைத்து சங்கட காலங்களிலும் அவர்களுக்கு தோள் கொடுத்து இருக்கிறது. தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கும். நமது அரசு முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 700க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 200க்கும் அதிகமான மீனவர்கள் மட்டும் உடனடியாக விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு பேசினார்.

* தமிழில் கையெழுத்து போடுங்கள்
பிரதமர் மோடி பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து சில தலைவர்கள், கடிதங்கள் எழுதுவதுண்டு. அந்த கடிதங்களிலே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், கடிதம் என்னவோ ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆனால் கையெழுத்தும் ஆங்கிலத்தில் போடுவதை பார்த்து நான் வியப்படைகிறேன். கையெழுத்து தமிழில் இருக்க வேண்டும் அல்லவா? என்றார்.

தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றம்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு
ராமேஸ்வரத்தில் நடந்த புதிய ரயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், வரவேற்புரை ஆற்றி பேசும்போது, ‘‘இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ராமபிரான் வந்த ராமசேது பாதையில் ராமநவமி நாளில் பிரதமர் மோடி வந்துள்ளது, வரலாற்று சிறப்புமிக்க வருகையாக அமைந்துள்ளது. மூன்றாவது முறை ஆட்சியில் அமர்ந்த பிறகு, தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக ராமேஸ்வரம் வந்துள்ள பிரதமர், இலங்கை அரசின் உயரிய விருதை பெற்று வந்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும்போதெல்லாம் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களையும், வளர்ச்சியையும் நிறைவேற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளார். நமது தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை போற்றும் பிரதமர், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தி பெருமை சேர்த்தார். திருவள்ளுவருக்கான கலாச்சார மையத்தை உலகம் முழுவதும் அமைத்து வருகிறார். தமிழ் அன்னையை போற்றி வரும் பிரதமராக மோடி இருக்கிறார்’’ என்றார்.

* அன்றும் குஜராத்தி இன்றும் குஜராத்தி
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நூறாண்டுகளுக்கு முன்பாக இந்த இடத்திலே பாம்பன் பாலத்தை கட்டியவர் யார் தெரியுமா? அவர் ஒரு குஜராத்தி. இது தற்செயல் நிகழ்வு. மீண்டும் அதில் ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்னவென்றால், மீண்டும் நூறாண்டுகளுக்கு பிறகு இந்த பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் நானும் ஒரு குஜராத்தி. இந்த புனிதமான ராமேஸ்வரம் பூமியிலே ராமநவமி நன்னாளிலே எனக்கு ஒரு உணர்ச்சி வயப்பட்ட ஒரு சூழ்நிலை என் மனதில் நிலவுகிறது’’ என்றார்.

The post வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது: ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: