செங்கோட்டையன் சந்திக்காமல் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக தற்போது வரை ஒற்றுமையாகவும் பலமாகவும் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், பா.ஜ.வுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அன்று இரவே, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். எடப்பாடியை சந்தித்த அமித்ஷா, செங்கோட்டையனையும் தனியாக சந்திக்க காரணம் என்ன? என்பதுதான் கேள்வியாக இருந்து வந்தது. இந்த சந்திப்பு அதிமுகவில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் நேற்று அதிகாலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சென்னையில் உள்ள ஓட்டலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய செங்கோட்டையன், சென்னையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் மீண்டும் சந்தித்துள்ளது அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சென்னையில் இருந்து செங்கோட்டையன் கோயிலுக்கு செல்வதாக கூறி தூத்துக்குடிக்கு நேற்று காலை புறப்பட்டு சென்றார். எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி பாஜ தலைமை பேசிய போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைத்து கொள்ள முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையை சில நிர்வாகிகள் விரும்பவில்லை என்றும் தெரிகிறது.
செங்கோட்டையன்தான் சரி. இதனால் செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற எண்ணமும் மற்ற நிர்வாகிகளுக்கு இருக்கிறது. செங்கோட்டையன் எல்லோரையும் அரவணைத்து செல்வார், அதிர்ந்து கூட பேச மாட்டார். எனவே ஒன்றிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்பு கொள்ளாத நிலையில் செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* சீமான், வேல்முருகன் ரகசிய சந்திப்பு?
சென்னை வந்த நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகனும் சந்தித்ததாக தகவல் பரவியது. இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
தகவல் வெளியான சிறிது நேரத்தில் நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று வேல்முருகன் கூறினார். சில மணி நேரத்தில் சீமானும் மறுப்பு தெரிவித்தார். நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று அவர் கூறினார். இதுதொடர்பாக சீமான் கூறுகையில், நான் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. அவரை சந்தித்தால் உங்களிடம் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை’ என்றார்.
* மாவட்ட தலைவர்களுக்கு விருந்து
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை நட்சத்திர ஓட்டலில் சென்னை மாவட்ட பாஜ தலைவர்கள், விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 11 மாவட்டத் தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இதில் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் கோட்ட பொறுப்பாளர்கள் வினோஜ் பி.செல்வம், கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது நிர்மலா சீதாராமன் கட்சியினருடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார். நேற்று பாஜ கட்சியின் தொடக்க நாள் ஆகும். அதையொட்டி நிர்மலா சீதாராமன் விருந்து கொடுத்தார் என்று கூறப்படுகிறது. கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று ஸ்தாபன நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி கட்சி கொடியேற்றினார். கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* அமித்ஷா வரும் 10ம் தேதி தமிழகம் வருகை?
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 10ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் அவர் தமிழகத்தின் புதிய பாஜ தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்வாார் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி அமைப்பது உள்பட பாஜ மேற்கொள்ள இருக்கும் வியூகம் குறித்தும் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 10ம் தேதி மாலை சென்னை வரும் அமித்ஷா, 11ம் தேதி வரை சென்னையில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
The post சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.