ஜனவரி இறுதியிலிருந்து தர்பூசணி வரத்து அதிகமாக இருந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து லாரி மற்றும் டெம்போக்களில் கொண்டுவரப்படும் தர்பூசணிகளை வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
அதுபோல், ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திற்கு முன்னதாக, கேரளாவில் இருந்து வரும் பலாபழம், தற்போது பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வர துவங்கியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம், கொழிஞ்சாம்பாறை, சாலக்குடி, அங்கேஷ்வரி, கொரடி, பாட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலாபழம் வரத்துவங்கியுள்ளது.
காந்தி மார்க்கெட்டில் குவிந்துள்ள பலாப்பழங்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி உடுமலை, திருப்பூர், கோவை, பல்லடம், ஈரோடு மற்றும் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். இதனால், கேரள பலாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அதிபட்ச விலையாக ரூ.300 வரை விற்பனையானது. இந்த ஆண்டு குறைந்த விலையாக ரூ.75 முதல் அதிகபட்ச விலையாக ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை ஏற்றத்துடன் இருந்தாலும் வெளியூர் வியாபாரிகள் நேரில்வந்து வாங்கி செல்கின்றனர்.
மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘வரும் 14ம் தேதி சித்திரை மாதம் முதல் தேதியையொட்டி (சித்திரை விசு) பலாபழம் வரத்து துவங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பலாபழம் வந்தாலும், அதிகபட்சமாக கேரள மாநில பகுதியிலிருந்தே வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்தமுறை விலை ஏற்றத்துடன் உள்ளது. சித்திரைவிசு நெருங்குவதால் விலை சற்று அதிகரித்துள்ளது’ என்றனர்.
The post சித்திரை விசுவை எதிர்நோக்கி பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கேரள பலாபழம் வரத்து துவங்கியது appeared first on Dinakaran.