சிதம்பரம் : தேர்ச்சி விகிதம் குறைவான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி தனிகவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், கான்சாகிப் வாய்க்கால் தடுப்புச்சுவர், சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பு, கனகசபை நகர் நகராட்சி துவக்கப்பள்ளி, மானாசந்து மற்றும் சம்பந்தகார தெரு அங்கன்வாடி மையங்கள், கனகசபை நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் வடக்கு வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் தெரிவித்ததாவது, கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்கு உட்பட்ட 36 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது.
அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட கமலீஸ்வரன் கோயில் தெருவில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்கு ஏராளமான ஆன்மிக பக்தர்களும், பொதுமக்களும் வந்துசெல்வதால் நவீன அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் ஏற்படுத்திடும் பொருட்டு சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 24 தங்கும் அறைகள், கலையரங்கக்கூடம், உணவருந்தும் கூடம், சுற்றுச்சுவர், வாகனநிறுத்தம் போன்ற பணிகள் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் (National Eligiblity cum Entrance Test-NEET) போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மையங்களில் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 1 முதல் மே 2 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு வகுப்பு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்மூன்று மையங்களில் 168 மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு தேர்விற்கு தயாராகி வருகின்றனர். சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே கான்சாகிப் வாய்க்கால் இடது கரையில் 310 மீட்டர் நீளத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கனகசபை நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மாலைகட்டிதெரு நகராட்சி நடுநிலைப் பளிளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், ஸ்மார்ட் வகுப்பின் வாயிலாக மாணாக்கர்களுக்கு கற்பிக்கும் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது.
மேலும், தேர்ச்சி விகிதம் குறைவான மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள் வழங்கி தனிகவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, வடக்கு வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வகுப்பில் மாணவர்களின் வாசித்தல் மற்றும் புரிதல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மானாசந்து மற்றும் சம்பந்தகாரதெரு அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் விளையாட்டுடன் கல்வி கற்றிடும் வகையில் கற்பித்திட ஆசிரியர்களுக்கும், பயிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க சத்துப் பொருட்களை வழங்கிட பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் மல்லிகா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமார் ராஜ், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post சிதம்பரம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு தேர்ச்சி விகிதம் குறைவான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி தனிகவனம் செலுத்த வேண்டும் appeared first on Dinakaran.