நகர்மன்ற சாதாரண கூட்டம்

பள்ளிபாளையம், டிச.24: சீதோஷ்ண நிலையில் மாற்றம் காரணமாக, நகரில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார். பள்ளிபாளையம் நகரமன்ற கூட்டம், தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் தயாளன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், தங்கள் வார்டில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். மேம்பாலம் கட்டுமான பணிக்காக கழற்றிப்போடப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கூறியும், நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேறி பின்னர் திரும்பினர். சுகாதார பணிகளுக்கான தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை நகராட்சி அதிகரிக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலர் சம்பூரணம் கேட்டுக்கொண்டார்.

பெரியார் நகர் பகுதிக்கு வழங்கும் குடிநீரின் அளவு போதவில்லை. காவிரி ஆற்றோரம் இரவு நேரங்களில் குடிமகன்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பனிக்காலம் துவங்கியுள்ளதால் கொசுக்களால் காய்ச்சல் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நகராட்சி மூலம் நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டுமென என அதிமுக கவுன்சிலர் சரவணன் கேட்டுக்கொண்டார். நகராட்சியில் நடைபெற்ற வார்டு சபை கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன என்று அதிமுக கவுன்சிலர் சுரேஷ் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த நகரமன்ற தலைவர் செல்வராஜ், மது பாட்டில்களை உடைப்பதை தடுக்க ஆற்றோரங்களில் வேலிகள் அமைக்க அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வார்டு சபையில் பெறப்பட்ட மனுக்கள் மீதான அடிப்படை வசதிகளை நகராட்சி மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: