நாமகிரிப்பேட்டை, டிச.24: நாமகிரிப்பேட்டை பகுதியில், வரத்து அதிகரிப்பால் கொத்தமல்லி விலை சரிந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா, செல்லிப்பாளையம், ஆயில்பட்டி, பிலிப்பாக்குட்டை, சிங்கிலியம்கோம்பை, உரம்பு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். சாகுபடிக்கு பின்னர் நாமக்கல் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஓசூர் மற்றும் சூளகிரியில் இருந்து நாமக்கல் மார்க்கெட்டிற்கு ஒரு சில நாட்களில் கொத்தமல்லி அதிகம் வருகிறது. தற்போது நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து கொத்தமல்லி வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், கட்டு ரூ.5க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில், விலை குறையும் என கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், கடந்த மாதம் 1 கட்டு கொத்தமல்லி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது. தற்போது ரூ.5க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் ஆள் கூலி, நிலம் பராமரிப்பு, உரம் இடுதல் என ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. நேரடியாக தோட்டத்திற்கு வரும் வியாபாரிகள், கட்டு ஒன்றுக்கு ரூ.3 வீதம் வாங்கி செல்கின்றனர். வெளிமார்க்கெட்டில் ரூ.5 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாகுபடி செலவு கூட கிடைக்கவில்லை,’ என்றனர்.
