கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய அரசு; ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுப்போம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் சூளுரை

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய மாநாட்டில் நேற்று நடந்த கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியமானது. எனவே, அது குறித்து பேசுவதும் முக்கியம். 2000வது ஆண்டின் தொடக்கத்தில் சர்க்காரியா குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்பட்டது. அதில் பல நல்ல முன் மொழிவுகள் இருந்தும், அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கூட்டாட்சி தத்துவம் நிதி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு. மாநில அரசுகள் எல்லாம் ஒன்றிய அரசின் பிரசார வாகனங்கள் போல நடத்தப்படுகின்றன. இது கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நம்முடைய குரலை உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரை மாநிலங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை. மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமே இல்லாமல் கிடப்பில் போடுகிறது. இது ஜனநாயக விரோத நடவடிக்கை.

ஒன்றிய அரசு பொது விதிகளை உருவாக்கினாலும், அதனை சுமப்பது மாநில அரசுகள் தான். ஒன்றிய அரசு தொடர்ச்சியாக மிகவும் வசதியானவர்களுக்கான சலுகைகளை வழங்கி வருகிறது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவைப் பொறுத்தவரை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மாநில அரசின் பெரும்பாலான அடிப்படை விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உயர்கல்வி மாநில அரசுகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. சங் பரிவார அமைப்புகள் உயர்கல்வி நிலையங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்குகின்றன. உயர் கல்வி அமைப்புகளுக்கு முறையான நிதி வழங்கப்படுவதில்லை. மாநில பல்கலைக்கழகங்களில் மாநில அரசோடு விவாதிக்காமல் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் நடைமுறையை கொண்டுவர ஒன்றிய அரசு சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றி வருகிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் முயற்சியால் மாநிலங்கள், தங்களின் உரிமைகளை, தேவைகளை கேட்டுப் பெறுவதில் சிக்கல் எழும் நிலை உருவாகும். கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள் பொதுமக்களுக்கான புரிதலை அதிகப்படுத்தும் என நம்புகிறேன்.
இவ்வாறு பேசினார்.

The post கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய அரசு; ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுப்போம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் சூளுரை appeared first on Dinakaran.

Related Stories: