தலைவராக முதல்வர் செயல்படுவார் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு சிடிசிஎல் நிறுவனம் மாற்றம்: ரூ.10 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: சிடிசிஎல் நிறுவனம் இனிமேல் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு மாற்றப்படும். இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் நகர்ப்புறமயமாதல் அதிவேகமாக நடைபெறுவதால், திடக்கழிவு மேலாண்மை என்பது சவாலாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் சுகாதாரக்கேடு போன்ற அபாயங்கள் உருவாகின்றன. திடக்கழிவு மேலாண்மை தொடர்பான மாநில கொள்கை, 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரியில் தலைமை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், மாநில அளவில் தூய்மை இயக்கத்தை தொடங்கலாம் என்ற கருத்து கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 27ம்தேதி நடந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையின் மானியக் கோரிக்கையின்போது துணை முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தினமும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் ஏற்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், இந்த இயக்கத்தின் நோக்கம், செயல்பாடுகள், இலக்கு போன்றவை தீர்மானிக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்திற்கான நிர்வாக அமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, இதன் தலைவராக முதல்வர் செயல்படுவார். துணைத் தலைவராக துணை முதல்வர் இருப்பார். நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நிதித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் அமைச்சர்கள் மற்றும் 3 நிபுணர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தலைமை செயலாளர் உள்ளிட்ட இந்த துறையின் செயலாளர்கள், அலுவல் சாரா உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இந்த நிர்வாகக் குழு, குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படும்போது கூடும். இதற்கான மாநில அளவிலான செயற்குழுவில் தலைமை செயலாளர் தலைவராகவும், சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் முக்கிய செயலாளர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.

தூய்மை இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை இந்த குழு வகுக்கும். மாவட்ட அளவிலான தூய்மை குழுவுக்கு கலெக்டரும், வட்டார அளவிலான குழுவுக்கு பி.டி.ஓ.வும் தலைவராக இருப்பார்கள். தூய்மை இயக்கத்துடன், தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (சிடிசிஎல்) இணைந்து செயல்படும். சிடிசிஎல் நிறுவனம் இனிமேல் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு மாற்றப்படும். இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தலைவராக முதல்வர் செயல்படுவார் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு சிடிசிஎல் நிறுவனம் மாற்றம்: ரூ.10 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: