கரூர், ஏப்.3: கரூர் மாவட்டம் தோகைமலை கொசூர் அருகே சமனற்ற நிலையில் உள்ள சாலையை வாகன ஓட்டிகளின் நலன் கருதி சமன் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி பகுதியில் இருந்து தோகைமலைக்கு பிரதான சாலை வசதி உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. இந்நிலையில், இந்த சாலையில் பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், கொசூர் அருகே அமைக்கப்பட்ட சாலை சமநிலையில் இல்லாமல் உள்ளது.
இந்த சமனற்ற சாலையில், பின்னால் அல்லது எதிரே வரும் மற்ற வாகனங்களுக்கு வழி விடும் வகையில் சாலையை விட்டு இறங்கும் போது, சாலையில் சில சமயங்களில் விபத்துக்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசூர் பகுதிக்கு முன்னதாக, சமனற்ற நிலையில் உள்ள இந்த சாலை பகுதியை பார்வையிட்டு, தேவையான சீரமைப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post கொசூர் அருகே சமனற்ற சாலையில் விபத்து அபாயம் appeared first on Dinakaran.