தாய்க்கு பதிலாக 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள் சிக்கினார்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மகளை தேர்வுத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர். இதன்படி நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்து விட்டு கையெப்பம் பெற்றார். அப்போது அங்கு தேர்வு எழுதிய ஒரு மாணவி, முககவசம் அணிந்து இருந்தார்.

இதில் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியிடம் முககவசத்தை அகற்றும்படி கூறினார். நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் மாணவியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபர் புகைப்படம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செல்வாம்பிகை என்பதும், இவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததும், கடந்த 28ம் தேதி நடந்த தமிழ் பாடதேர்வை இதே போல் முககவசம் அணிந்து செல்வாம்பிகை தேர்வு எழுதியதும் தெரிய வந்தது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்கு வந்த போலீசார், செல்வாம்பிகையை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாய்க்கு பதிலாக 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: