காதல் விவகாரம்; பெட்ரோல் குண்டு வீசி காதலியின் அண்ணன், நண்பர்களை கொல்ல முயற்சி: காதலன் உட்பட 3 பேர் கைது; உள்ளகரத்தில் பரபரப்பு


ஆலந்தூர்: சென்னை உள்ளகரத்தில், காதல் விவகாரம் காரணமாக காதலியின் அண்ணன், நண்பர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற காதலன் உள்பட 3 பேரை ேபாலீசார் கைது செய்தனர். சென்னை உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (25). இவரது தங்கை, மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே பகுதியில் ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்களை விநியோகிக்கும் நெல்சன் (23) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நெல்சனின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று, அந்த மாணவியிடம், ‘நெல்சனை காதலிப்பதை விட்டுவிடு’ என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் ரஞ்சித்துக்கு தெரியவந்தது. அதனால், தனது தங்கையை விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு பைக்கில் அழைத்து செல்ல முயன்றார். அந்த நேரத்தில் நெல்சன், தனது நண்பர்களுடன் வந்து தகராறு செய்தார். மேலும் ரஞ்சித்தின் பைக்கை பறித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், தனது நண்பர்களுடன் சென்று நெல்சன் நண்பரின் பைக்கை எடுத்து கொண்டு உள்ளகரம் பாரதி தெருவில் வைத்திருந்தார். பின்னர், ‘என் பைக்கை கொடுத்தால்தான் உங்களது பைக்கை தருவோம்’ என செல்போனில் ரஞ்சித் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நெல்சன், தனது நண்பர்களான மெக்கானிக் ஜெயகுமார், துணி கடை ஊழியர் கோகுல் ஆகியோருடன் உள்ளகரத்துக்கு நேற்று முன்தினம் சென்று ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர்.

பெட்ரோல் குண்டின் திரி அணைந்து விட்டதால் வெடிக்கவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பெருங்குடி கல்லுகுட்டையில் நேற்று நெல்சன், ஜெயக்குமார், கோகுல் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மடிப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காதல் விவகாரம்; பெட்ரோல் குண்டு வீசி காதலியின் அண்ணன், நண்பர்களை கொல்ல முயற்சி: காதலன் உட்பட 3 பேர் கைது; உள்ளகரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: