லூதியானா: பஞ்சாப்பில் பணத்தகராறில் வாலிபரை கொலை செய்து உடலை 6 துண்டுகளாக வெட்டி வீசிய தம்பதியை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள போரா கிராமத்தை சேர்ந்த தச்சர் சம்ஷேர் சிங் ஷேரா என்பவரது வீட்டிற்கு, அச்சு இயந்திரம் வாங்குவதற்காக மும்பையைச் சேர்ந்த தேவிந்தர் சிங் (30) வயது இளைஞர் கடந்த 6ம் தேதி வந்துள்ளார். அப்போது இருவரும் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில், பழைய கடன் பாக்கி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சம்ஷேர் சிங் தள்ளிவிட்டதில் தேவிந்தர் சிங் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக கருதிய சம்ஷேர், தனது வீட்டில் இருந்த ரம்பத்தை வைத்து உடலை 6 துண்டுகளாக வெட்டி சிதைத்துள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சம்ஷேரின் மனைவி குல்தீப் கவுர், ரத்தக்கறையை சுத்தம் செய்யவும், உடல் பாகங்களை மறைக்கவும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் கணவன், மனைவி இருவரும் உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் டிரம்பில் அடைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று ஜலந்தர் புறவழிச்சாலை அருகே வீசியுள்ளனர். கடந்த 8ம் தேதி உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கடந்த 9ம் தேதி தம்பதியை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்டவரின் ஒரு கை இன்னும் கிடைக்கவில்லை. அதனைத் தெருநாய்கள் கவ்விச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என்று தெரிவித்தனர். தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
