புதுகையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால் ஆத்திரம் ஜல்லிக்கட்டு வீரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: இனி பிடிக்கவே கூடாது என கைகளை வெட்டிய கொடூரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால், ஜல்லிக்கட்டு காளை வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். இனி காளையை பிடிக்கவே கூடாது என்று கூறி கைகளை வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீழவேப்பங்குடியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் இன்பரசன் (25). சென்ட்ரிங் தொழிலாளி. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது, காளை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளார்.

பொற்பனைக்கோட்டை மணக்கொல்லை தோப்பு கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (21), தெற்கு இம்மனாம்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (23) மற்றும் இவர்களது நண்பர்கள் ஒன்றிணைந்து ‘அன்பு பாய்ஸ்’ என்ற பெயரில் குழு அமைத்து ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பது, காளைகளை பிடிப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டில் இன்பரசன், ‘அன்புபாய்ஸ்’ காளையை அடக்கியதோடு, அந்த போட்டோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டசாகவும் வைத்துள்ளார்.

இதனால் அன்பு பாய்ஸ் இளைஞர்கள், இன்பரசன் மீது கோபத்தில் இருந்துள்ளனர். அதன்பின் இன்பரசன், ஜல்லிக்கட்டில் காளை பிடிப்பதை விட்டு, காளை வளர்ப்பதில் தனிகவனம் செலுத்தி வந்துள்ளார். இவர் வளர்க்கும் காளை, எந்த ஜல்லிக்கட்டிலும் பிடிபடாத நிலையில் அன்பு பாய்ஸ் இளைஞர்கள் இன்பரசன் ஜல்லிக்கட்டு காளையை கிண்டல் செய்து, இன்ஸ்டா மற்றும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் 20ம்தேதி ராயப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் இன்பரசன் மற்றும் நண்பர்கள் அன்பு பாய்ஸ் இளைஞர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சம்பட்டி விடுதி போலீசார், இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் பேசி, கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை அடுத்த அழகம்மாள்புரத்தில் சென்ட்ரிங் வேலை செய்ய இன்பரசன் மற்றொரு நபருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அன்பு பாய்ஸ் என்று எழுதப்பட்ட 2 பைக்கில் வந்த 6 பேர் கும்பல், இன்பரசன் பைக் மீது, ஒரு பைக்கால் மோதியுள்ளனர். அவர் தப்பி ஓடவே, அந்த கும்பல், ஓட ஓட விரட்டி சென்று சுற்றிவளைத்து, கைகள் இருந்தால்தானே காளையை அடக்குவாய் என்று கூறி 2 கைகளையும் வெட்டியுள்ளனர்.

தொடர்ந்து உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் இன்பரசன் பலியானார். இதுகுறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி, அன்பு பாய்ஸ் குழுவை சேர்ந்த விக்னேஷ், ரஞ்சித், ரோகேஷ், சீனு, திருமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

* ரவுடியை தீர்த்துக்கட்ட வந்த கும்பலை தடுத்த தாய் சரமாரி வெட்டிக்கொலை
சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் சின்னபிள்ளை (67). இவருக்கு சின்னதம்பி, பாபு, கண்ணன் ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதில் மனைவியை பிரிந்த சின்னதம்பி மட்டும் தாயுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருவரும் இருந்தனர்.

அப்போது வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்த 4 பேர் கும்பல், சின்னதம்பியை வெட்ட முயன்றனர். அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் சின்னபிள்ளையை சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் வரவே கும்பல் தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சின்னபிள்ளையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், ‘2023ல் அதேபகுதியை சேர்ந்த பரசுராமனை கொலை செய்த வழக்கில் சின்னதம்பியும், சின்னபிள்ளையும் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தனர்.  பரசுராமனின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க அவரின் கூட்டாளிகளான சரவணக்குமார் (எ) சரவணன் (25),

தூங்கான் (எ) பிரசன்னா (25), ராம்கி (எ) பிரசாந்த் (25) மற்றும் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சின்னதம்பி வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டி கொல்ல முயன்றதும், தடுக்க முயன்ற சின்னபிள்ளையை வெட்டியதும் தெரியவந்தது. இதனிடையே, அரசு மருத்துவமனையில் சின்னபிள்ளை நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, ரவுடி சரவணக்குமார், பிரசன்னாவை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: