மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு கணவரை கொன்று ஏரியில் வீசிய மனைவி: பரபரப்பு தகவல்

தர்மபுரி: தர்மபுரி அருகே மருமகனுடன் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை கடத்தி கொன்று ஏரியில் வீசிய மனைவி, மருமகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி எரங்காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (47). இவர் மருந்து கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜோதி (45) என்ற மனைவியும், 2 மகள், 2 மகனும் உள்ளனர்.

கடந்த 7ம் தேதி மருந்துக்கடைக்கு வேலைக்கு சென்ற ஆறுமுகம் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கடந்த 9ம் தேதி அவரது மனைவி ஜோதி தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதிகோன்பாளையம் தூதரையான் ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர் மாயமான ஆறுமுகம் என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஆறுமுகத்தின் தலையில் பல வெட்டுகாயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆறுமுகத்தின் மனைவி ஜோதி, மருமகனான ஆட்டோ டிரைவர் சீதாராமன் (33) உள்ளிட்ட 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், 6 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை கொலை செய்து ஏரியில் வீசியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: சீதாராமனுக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். அவருக்கு ஆறுமுகத்தின் மனைவி ஜோதியுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதுதெரிந்து சீதாராமனின் மனைவி, பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து ஜோதியிடம் உனது மூத்த மகளை திருமணம் செய்து கொடு என தொந்தரவு செய்ததால், ஜோதி தனது மூத்தமகளை கட்டாயப்படுத்தி கடந்த 6 மாதத்திற்கு முன்பு சீதாராமனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதில் ஆறுமுகத்திற்கும், மகளுக்கும் விருப்பம் இல்லை. இந்நிலையில் சீதாராமன், ஜோதியுடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார். இது தெரிந்து ஆறுமுகம் மனைவியை கண்டித்தார். தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 7ம்தேதி சீதாராமன், அவரது நண்பர்கள் 4 பேர் மற்றும் ஜோதி ஆகியோர் ஆறுமுகத்தை கடத்தி சென்று கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரை ஏரியில் வீசி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆறுமுகம் மனைவி ஜோதி (45), சீதாராமன்(33), அவரது நண்பர்களான சரவணன் (37), ஜெய்சங்கர் (32), பிரவீன்குமார் (25), முருகன் (26) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

Related Stories: