?கலசத்திற்கு தேங்காய்தான் வைக்க வேண்டுமா, வேறு எந்த காயும் வைக்கக் கூடாதா? சுரைக்காய் கூட கும்பம் போல் அழகாக இருக்கிறதே, அதை வைத்தால் என்ன?
– புவனா, திண்டுக்கல்.
முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்து கொள்ளுங்கள். மனிதன் உயிர் வாழத் தேவையானது தண்ணீர். ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைகற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப் போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து பூஜிக்கிறோம்.பித்தளை அல்லது தாமிர சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. அறிவியலாகச் சொல்வதானால், கடத்திகள். வெளியே உச்சரிக்கப்படுகின்ற மந்திரங்களை உள்ளே ஈர்த்துக் கொடுக்கும் திறன் படைத்தவை. இறைவனின் உடலாக இந்தப் பாத்திரங்களையும், அதன் மேல் சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாகவும் பொருள் கொள்ளலாம். ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக் கருதப்படுகின்றன. அறிவியல் ரீதியாகச் சொல்வதானால், குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்பவை போல.
மேலே மாவிலைக் கொத்தைச் சொருகி அதன் மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம். மற்ற இலைகள் எல்லாம் மரத்தில் இருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும், சில நாட்களில் அழுகியும் விடும். ஆனால், மாவிலை மட்டுமே குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே பசுமை மாறாமல் இருக்கும். அதற்கும் மேலான நாட்களிலும் சருகாக வேண்டுமானால் ஆகுமே தவிர, அழுகாது. (சிலர் வீடுகளில் தலைவாசலில் தோரணமாகக் கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணம், மாதக் கணக்கில் மழை, வெயில் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு சருகாகத் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம்) ஆனால், இந்த காரணத்தால் மட்டும் மாவிலையை கலசத்திற்கு பயன்படுத்தவில்லை; மாமரம் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைத் தரவல்லது. மாம்பழத்தை ஞானப் பழம் என்று அழைப்பதை திருவிளையாடல் திரைப்படத்திலும் பார்த்திருக்கிறோமே! தேங்காயின் தலைப்பகுதியைத் தாங்கிப் பிடிப்பதால் ஞானத்தைத் தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம். சரி, தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும்? மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் உண்டு.
தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. இறைவனுக்கு உள்ள திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது ‘சோமசூர்யாக்னி லோசனாயை நம:’ என்று உச்சரிப்பார்கள். அதாவது, வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய மூன்று கண்களை உடைய தேங்காயை தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம். (தேங்காயை உடைத்தவுடன் குடுமியைப் பிய்த்துப்போடு என்று சொல்கிறோம்) கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால்கூட வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய இயலும். ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் இருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது. சுரைக்காய் உள்பட வேறு எந்த காய்க்கும் இல்லாத சிறப்பு தேங்காய்க்கு இருப்பதால்தான் அது கும்பத்தில் கிரீடமாக வைத்துப் போற்றப்படுகிறது.
?கிருஷ்ணர் பிறந்தது அஷ்டமியில், ராமர் அவதரித்தது நவமியில், நரசிம்மர் தோன்றியது சதுர்த்தசியில், இப்படி திருமால் அவதாரங்கள் மூன்றும் வெவ்வேறு திதிகளில் அவதரித்திருக்க, பெருமாளுக்கு மட்டும் ஏகாதசி அன்று விரதம் ஏன்?
– பிரபாகரன், திருவையாறு.
சாகாவரம் தரும் அமிர்தத்தை அடைய தேவர்கள் அசுரர்களோடு இணைந்து பாற்கடலைக் கடைந்தனர். வாசுகிப் பாம்பினைக் கயிறாகவும், மேருமலையை மத்தாகவும் கொண்டு ஒருபுறம் அசுரர்களும், மறுபுறம் தேவர்களும் ஒன்றாக இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அவ்வளவு எளிதாக அமிர்தம் கிடைத்துவிடவில்லை. வலி தாங்காத வாசுகிப்பாம்பு ஆலகால விஷத்தைக் கக்கியதுதான் மிச்சம். இந்த நிலையில் எல்லோரும் ஒன்றாக இணைந்து பெருமாளை நோக்கி விரதம் இருந்து ஒருமித்த மனதோடு சிரத்தையாக பிரார்த்தனை செய்ய பாற்கடலில் இருந்து அமிர்தம் நிறைந்த குடத்தோடு தன்வந்திரி வடிவில் பகவான் வெளிப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டியது தேவர்களும், அசுரர்களும் ஒன்றாக இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கிய நாள் பிரதமை. வாசுகிப் பாம்பு ஆலகால விஷத்தைக் கக்கிய நாள் அஷ்டமி. அதனால்தான் இந்த இரண்டு நாட்களிலும் நாம் நல்ல செயல்களை மேற்கொள்வதில்லை. எல்லோரும் ஒன்றாக இணைந்து பெருமாளை நோக்கி விரதம் இருந்த நாள் ஏகாதசி. ஏகாதசியில் விரதம் இருந்ததன் பலனாகத்தான் சாகாவரம் தரும் அமிர்தத்தை அமரர்களால் அடைய முடிந்தது. மனிதர்களாகிய நாம் ஏகாதசியில் விரதம் இருப்பதால் தன்வந்திரியின் அருளால் உடல் ஆரோக்யம் சிறக்கும், மறுபிறவி இல்லாத அமரத்துவம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
?முன்னோர் வழிபாட்டிற்கு எள்ளு உபயோகிப்பதன் காரணம் என்ன? வேறு தானியங்களைக் கொண்டு தர்ப் பணம் முதலான காரியங்களைச் செய்யக்கூடாதா?
– நடராஜன், திருச்சி.
மஹாவிஷ்ணுவின் வியர்வைத் துளி பூமியில் விழுந்து அதில் இருந்து உருவானது எள்ளுச் செடி என்கிறது சாஸ்திரம். ஆயுள்காரகன் ஆன சனிக்கு உரிய தானியம் ஆகவும் எள் திகழ்கிறது. மோட்சத்தைத் தருபவர் மகாவிஷ்ணு என்பதால் அவருடைய ரோமத்திலிருந்து உதிர்ந்த எள்ளினை பித்ரு காரியத்திற்குப் பயன்படுத்துகிறோம்.
?அமாவாசை நாளை ஒரு சிலர் நல்ல நாள், நல்ல செயலை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். வேறுசிலர் அது முன்னோர்கள் நினைவு தினம், அதனால் நல்ல விஷயம் செய்யக்கூடாது என்கிறார்கள். எது உண்மை..?
– சிவராஜ், மதுரை.
அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம் என்பது உண்மையே. தந்தைக்கு உரிய கோள் ஆகக் கருதப்படும் சூரியனும், தாயாரைக் குறிக்கும் கோள் ஆன சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளே அமாவாசை. அதனால்தான் அன்றைய தினம் நம் வீட்டில் முன்னோர்கள் நினைவாக இலைபோட்டு படையல் வைக்கிறோம். எள்ளும், தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்கிறோம். இந்த நாளில் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் தொழிலில் போட்டிகளைச் சந்திக்கின்ற வகையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது, அல்லது ஏற்கெனவே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது முதலான செயல்களில் ஈடுபடலாம். மாறாக, புதிய வீட்டில் பால் காய்ச்சுதல், க்ருஹப்ரவேசம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள், (பெண்பார்க்கும் நிகழ்ச்சி, பந்தல்கால் நடுதல், நிச்சயதார்த்தம் போன்றவை) முற்றிலும் புதிய வியாபாரம் துவங்குதல், முதன்முதலில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யக்கூடாது.
The post கலசத்திற்கு தேங்காய்தான் வைக்க வேண்டுமா? appeared first on Dinakaran.