பாகம் 4
7. மயிலாடுதுறை (திருஇந்தளூர்)
மயிலாடுதுறை இன்னொரு புனிதத் தலம். கும்பகோணத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. சம்பந்தராலும் (22), அப்பராலும் (11) பாடல் பெற்ற தலம், இங்குள்ள மயூரநாதஸ்வாமி கோயில்.
“ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்
ஞானப் பொருள் கொண்டு அடிபேணும்
தேனொத்த இனியான் அமருஞ்சேர்
வானம் மயிலாடுதுறையே.’’
(சம்பந்தர் 1.38.3)
‘ஊனத்து இருள் என்பது அகங்காரம். இது நீங்கி நாம் ஞானம் பெற, மயிலாடுதுறை மயூரநாதரை வணங்க வேண்டும்; அவர் பக்தர்களின் நோய்களையும், துன்பங்களையும் தீர்ப்பார்.’
திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் திவ்ய தேசம், மயூரநாதர் கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. பெருமாள் சயனத் திருக்கோலத்தில் அருள்கிறார். இக்கோயிலை திருமங்கை ஆழ்வார்
(11) மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
“ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து;
அடியோர்க்கு தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே!நீரே போம் வாழ்ந்தே’’ (1331)
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் பெருமாளைக் கோபித்துக் கொள்கிறார். இது நிந்தா ஸ்துதி என்று சொல்லப்படுகிறது. கோபிப்பது போல் பெருமாளின் திவ்ய கோலத்தைப் புகழுகிறார். ‘தங்கக் காசின் பளபளப்பு போன்ற மேனி உடையவரே, உமது முழு அழகையும் நான் காணுமாறு தரிசனம் தரக்கூடாதா?’ என்ற ஏக்கத்தைக் கோபமாக வெளிப்படுத்துகிறார். ‘எனக்குக் காட்ட விருப்பம் இல்லை என்றால் நீரே வைத்துக் கொள்ளும்’ என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
ஆழ்வாரின் கோபம் சுந்தரரின் கோபத்தோடு ஒப்பிடக் கூடியது. சுந்தரர் வலது கண் பார்வை வேண்டி திருவாரூர் ஈசனை நோக்கிப் பாடுகையில் ‘என் கண் கொண்டீர், நீரே பழிப்பட்டீர்! வாழ்ந்து போதீரே’ என்று வெளிப்படுத்திய கோபம், ஆழ்வாரின் ‘வாழ்ந்தே போம் நீரே’ என்பதோடு ஒப்பிடக்கூடிய நயம் மிக்கது. தம் 1335வது பாசுரத்தில் பரிமள ரங்கனின் அழகைத் திருமங்கை ஆழ்வார் விவரிக்கிறார்:
“முன்னை வண்ணம் பாலின் வண்ணம், முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம், மணியின் வண்ணம் புரையும் திருமேனி,
இன்ன வண்ணம் என்று காட்டீர், இந்தளூரீரே’’!
‘முன்னர் வெள்ளை நிறம், இப்பொழுது கருப்பு நிறம்; நடுவில் தங்கம் போன்ற மஞ்சள் நிறம், பின்னர் பவழத்தின் சிவப்பு நிறம். உண்மையான நிறத்தைக் காட்டுவீரா?’ என்று கேட்கிறார். நான்கு யுகங்களுக்கும் மேலாக அங்கு அருள் பொழியும் பெருமாள் யுகத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ளார் என்பது பொருள்.
8. நாகப்பட்டினம்
(திருநாகைக்காரோணம்/திருநாகை)
நாகப்பட்டினம் கடற்கரையில் அமைந்த ஊர். மயிலாடுதுறையிலிருந்து 60 கி.மீ. இங்றையும் இறைவன், காயாரோஹணேஸ்வரர் (சம்பந்தர் 11, அப்பர் 39, சுந்தரர் 11). இங்குள்ள திவ்ய தேசம் சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில். (திருமங்கை ஆழ்வார் 10). இரு கோயில்களும் 1 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ளன.
காயம் என்றால் உடல். ஆரோஹணம் என்றால் எழுதல். காயாரோஹணக் கோயில், நமது உடலையும், ஆன்மாவையும் எழுப்பி, இறைவனை நோக்கிச் செலுத்தவல்லது. இந்த வகையில் மூன்று கோயில்கள் காயாரோஹண (காரோணம்) க்ஷேத்ரங்களாக கருதப் படுகின்றன. அவை:
1. திருநாகைக்காரோணம்.
2. திருக்குடந்தை காரோணம்.
3. திருக்கச்சிக் காரோணம்.
“மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன்றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரேயாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே’’. (சுந்தரர், 7.46.9)
‘கடல் நாகைக் காரோணத்தில் மேவி இருக்கும் பெருமானே! விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசனே, எனக்கு அருள வேண்டும். உமது மனைவியும் இளைய மகனும் எனக்கு அருளுவதில்லை. உமது மூத்த மகன் பெரு வயிறு உடையவன். அவனுக்கு ஒன்றும் தெரியாது. உமது குடும்பம் எப்படி இவ்வளவு விட்டேத்தியாக இருக்கிறது! நீரே எனக்கு கதி. அதனால் நான் உம்மை நெருங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன். நீர் அருளினால் மட்டுமே உம்மை விடுவேன். என்னுடைய நெருக்கமான அணைப்பு உமக்கு வலிக்கும்தான்! அதனால் நீர் என்னைக் கொடுமைக்காரன் என்று கூறக்கூடாது. தயவு செய்து எனக்கு அருள்வீராக.’
சுந்தரரால் மட்டுமே தோழமை உரிமையோடு இறைவனிடம் அவனுடைய குடும்பத்தாரைப் பற்றியே குறை சொல்ல முடியும்! இதுவும் ஒருவகை நிந்தா ஸ்துதிதான் – திருஇந்தளூர் பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் எடுத்துக் கொண்ட உரிமைபோல! நாயகி பாவத்தில், திருமங்கை ஆழ்வார், நீலமேகப் பெருமாளையும் (மூலவர்) சௌந்தர்ய ராஜப் பெருமாளையும் (உத்சவர்) பாடுகிறார்:
“பொன்னிவர் மேனி மரக தத்தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின் இவர் வாயில்நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர்தோழீ, என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார், அன்னையென் னோக்குமென்றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா!’’ (1758) ‘இவர் மேனி பொன்னைப் போன்றது. இவர் மாலைகள் பச்சை நிறம் கொண்டவை. இவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். என் அருகில் இருக்கும் என் தாய் என்ன நினைக்கப் போகிறாளோ? அச்சோ!’ என்ற பெண்மையின் வெட்க பாவம்! பெருமாள் மீது ஆழ்வாருக்கு இருக்கும் உரிமையும் அன்பும் இந்த நாயகி பாவப் பாசுரத்தில் விளங்குகிறது.
9. திருக்கோவலூர்/வீரட்டம்
திருக்கோவலூர் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு, திருமங்கை ஆழ்வார்(18), பொய்கை ஆழ்வார்(1), பூதத்தாழ்வார்(1) ஆகியோர் பாடி மகிழ்ந்த உலகளந்த பெருமாள் திவ்ய தேசம் உள்ளது. கோயிலில் த்ரிவிக்ரமப் பெருமாள் விஸ்வரூபனாய், வலது காலை மேலே தூக்கி விண்ணை அளக்கும் கோலத்தில் நிற்கிறார். (இதே பெருமாள் காஞ்சீபுரத்தில் இடது காலைத் தூக்கி பூமிக்கு இடையாக வைத்திருக்கிறார்; சீர்காழியில் தாடாளராக, இடது கால் விண் நோக்குமாறு நிற்கிறார்) இந்தக் கோயில் பஞ்ச கிருஷ்ண சேத்ரங்களில் ஒன்று. மற்ற நான்கு – திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம்.
“வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்நகரும், நான்குஇடத்தும்-
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே,
என்றால் கெடுமாம் இடர்’’ (பொய்கை ஆழ்வார், 2158)
பெருமாள் திருமலையில் நின்ற கோலத்திலும், பரமபதத்தில் அமர்ந்த கோலத்திலும், திருவெஃகாவில் கிடந்த கோலத்திலும், திருக்கோவலூரில் நடந்த கோலத்திலும் சேவை சாதிக்கிறார். இவ்விடங்களில் தரிசனம் செய்தால் பக்தர்களின் இடர்கள் களையப்படும். (திருப்பரமபத திவ்ய தேசத்தை இந்த உலகில் காண முடியாது. ஆனாலும் ஆழ்வார் முடியும் என்ற பொருள்படிப் பாடுகிறார். இந்தத் தலங்கள் இடர் களையும் இடங்களாகச் சொல்லப் படுகின்றன. (சம்பந்தர் திருநெடுங்களப் பதிகத்தை இடர்களையும் பதிகமாக அருளினார்.)
முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் மூவரும், ஒருவரை ஒருவர் அதுவரை சந்தித்தது இல்லை. திருக்கோவலூரில் ஓர் இரவு மழை பெய்து கொண்டிருந்த பொழுது பொய்கை ஆழ்வார் ஒரு திண்ணையில் படுத்துக் கொண்டிருந்தார். இங்கு பூதத்தாழ்வார் வந்து இடம் கேட்க, ஒருவர் படுக்கும் இடத்தில் இருவர் அமர்ந்தனர். அடுத்து பேயாழ்வாரும் அங்கு வர, மூவர் நிற்கலாம் என்று முடிவு பண்ணி நின்றனர். அப்போது தங்களுடன் இன்னொருவரும் நிற்பதுபோல் அவர்கள் உணர்ந்தனர்.
உடனே பொய்கை ஆழ்வார், “வையம் தகளியா வார்கடலே நெய்யாக – வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை-இடராழி நீங்குகவே” என்று முதலில் பாடினார். ‘உலகம் – விளக்கு, கடல் – நெய், சூரியன் – ஒளி இந்த தீபத்தை நான் சக்கரம் ஏந்தும் பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறேன்‘ என்று பொருள். அடுத்து பூதத்தாழ்வார், “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்” என்று பாடினார். ‘என் அன்பை அகலாகவும் என் ஆர்வத்தை நெய்யாகவும் பெருமாள் மேல் உள்ள சிந்தையை திரியாகவும் கொண்டு விளக்கு ஏற்றினேன்’ என்று பொருள்.
இந்த இரு பாசுரங்களின் ஒளியில் மூவரும் அங்கு நின்ற நான்காவது நபர் கோவலூர் பெருமாளே என்று உணர்ந்தனர். அந்த தரிசனம் கண்ட பேயாழ்வார், ‘‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் – என்னாழி வண்ணன் பால் இன்று‘‘ என்று பாடினார். அதாவது, ‘திருமகளை பெருமாளின் மார்பில் கண்டேன் (அவள் ஒளியாலேயே கரிய நிறமுடைய பெருமாளை அந்த இருட்டிலும் தரிசிக்க முடிகிறது!), பெருமாள் திருமேனியைக் கண்டேன், அவர் சங்கையும் சக்கரத்தையும் கண்டேன்,’ என்று பொருள். முதலாழ்வார்கள் மூவரையும் சந்திக்க வைத்து பாடவும் வைத்த பெருமாளின் திருவிளையாடல் இது.
திருக்கோவலூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயில் சம்பந்தர்(11), அப்பர்(10) இருவரால் பாடல் பெற்ற தலம். சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களைக் குறிக்கும் கோயில்களில் இது ஒன்று. இங்கே அந்தகாசுர வதம் புராண சம்பவமாக விளங்குகிறது. உலகளந்த பெருமாள் கோயிலிலிருந்து 1.5 கி.மீ. தொலைவு.
“படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.’’ (சம்பந்தர் 2.100.1)
‘கூற்றுவனகிய யமன் பாசக் கயிற்றை வீசும்போது, எமைக் காக்க யாரும் இல்லை என்று நெஞ்சமே அழாதே. கோவலூர் வீரட்டானத்தை அடைந்தால் உனக்கு கவலை இல்லை. கோவலூர் இறைவன் நம்மை யமனிடமிருந்து காப்பாற்றுவார்,’ என்று பொருள்.
தொகுப்பு: பேராசிரியர் ஜி.ஸ்ரீநிவாசன்
The post பதிகமும் பாசுரமும் appeared first on Dinakaran.