?தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்?
– ஆர்.திலகவதி, போரூர் – சென்னை.
மஞ்சள் கயிற்றை ஆடி-18, காரடையான் நோன்பு, தீபாவளி நோன்பு போன்ற சமயங்களில் மாற்றிக் கொள்ளலாம். மற்றபடி அவசியம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் சுப நட்சத்திர, சுபயோக தினங்களில் மாற்றிக் கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை வேண்டாம். அதைப் போலவே திதிகளில்; அஷ்டமி, நவமி, பிரதமை முதலிய தினங்களில் மாற்றிக் கொள்ள வேண்டாம். பெரும்பாலும் முற்பகல் நேரத்தில் மாற்றிக் கொள்வது நல்லது. தெய்வத்தின் பாதத்தில் வைத்து பெரியோர்களிடம் எடுத்துக் கொடுத்து மாற்றிக் கொள்வதும், பிறகு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதும் சிறந்தது.
?எல்லா மனிதர்களாலும் ஏன் வெற்றிபெற முடியவில்லை?
– ரவி கிருஷ்ணன், கோவில்பட்டி.
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்’’.
– என்றார் வள்ளுவர்.
2000 வருடங்கள் கழிந்தாலும்கூட இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளத் தவறுவதால்தான் நாம் தோல்வி அடைகிறோம். எதைச் செய்ய வேண்டுமோ அதை விட்டுவிட்டு எதைச் செய்ய முடியாதோ அதை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நான் 36 ஆண்டு காலம் கல்லூரியில் பணி புரிந்திருக்கிறேன். கணிதத்துறையில் ஆர்வம் இல்லாத மாணவரை பொறியியல் துறையில் சேர்த்துவிடுவார்கள். அவர் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே களைத்துவிடுவார். ஆனால் அவர் கலைத்துறையில், பேச்சுத் துறையில் வல்லவராக இருப்பார். ஆனால் அதை விட்டுவிட்டு அவருக்கு வராத ஒரு துறையில் கொண்டு போய்ச் சேர்த்து அவருடைய வாழ்க்கையை தோல்வியடையச் செய்து விடுவார்கள். லியோ டால் ஸ்டாய் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.
அற்புதமான விஷயம்.
ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு வித திறமை இருக்கிறது. அதை அவர் பயன்படுத்தாமல் இருப்பது வங்கியில் பணத்தைப் போட்டு வைத்துவிட்டு பட்டினி கிடப்பதற்குச் சமமாகும் என்றார். அதைத் தான் பெரும்பாலோர் செய்து கொண்டிருக்கிறோம்.
?ஆன்மிகத்தில் பக்தி, கோயில், வழிபாடு, மட்டும்தானா? பொருளாதாரம் குறித்துச் சிந்தனை இருக்கிறதா?
– சிவசுப்ரமணியன், திருக்கோவிலூர்.
ஆன்மிகம் நடைமுறை வாழ்வியலுக்கு எதையும் சொல்லித் தருவதில்லை என்றே நினைக்கிறோம். அப்படி கிடையாது. எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதைப் பற்றி எல்லாம் ஆன்மிகம் சொல்லித் தருகிறது. ஆனால், அது மறைவாக இருக்கும். ஒருவன் அதிகம் சம்பாதிப்பதைவிட சிக்கனமாக வாழ்ந்து சேமித்து, பிறருக்கு உதவுவதுதான் ஆன்மிகம். ஆன்மிகம், எப்பொழுதும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழச் சொல்வதில்லை. அது எளிமையைத் தான் கற்பிக்கிறது. ஆன்மிக வாழ்க்கை என்பது தெளிவும், அமைதியும், திருப்தியும், சந்தோஷமும் நிரம்பியது.
?மனித வாழ்க்கை கற்பிக்கும் நீதி என்ன?
– சந்தோஷ் தியாகராஜன், சின்னகடைவீதி மலைக்கோட்டை.
நாம் படிக்கிறோம். பதவியில் இருக்கிறோம். பணக்காரராக இருக்கிறோம். செல்வாக்கு உள்ள நபராக இருக்கிறோம். ஆனால், இவையெல்லாம் நம்முடைய குணத்தை (character) உயர்த்துவதாக இருக்க வேண்டும். பிறருக்கு பரோபகாரமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இதுவே நமக்கு ஆணவத்தையும், பிறரை அவமதிக்கும் தன்மையையும் தரும் என்றால் ஒருகட்டத்தில் பதவி, பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிடும். நாடாளும் மன்னனும் கடைசியில் பிடி சாம்பலாவான் என்று சொல்வதற்கு என்ன காரணம் என்றால், கர்ம வினையால் வந்த பதவி, பட்டம், செல்வாக்கு எல்லாவற்றையும் மற்றவர்களின் நல்வாழ்வுக்கு பயன்படுத்துங்கள். அதை வைத்துக் கொண்டு மற்றவர்களை அவமானப்படுத்திவிடாதீர்கள் என்பதற்காகத்தான்.
?சக்தி என்பது என்ன?
– பாண்டியராஜன், மதுரை.
நம்மை நாமே புரிந்து கொள்வதுதான் (Self Understanding) சக்தி. நம் சக்தி நமக்கே புரிவதில்லை. ராமாயணத்தில் பார்க்கிறோம். கடலைத் தாண்ட முடியுமா? யாரால் முடியும்?என்று பரிசீலித்துக் கொண்டிருந்த பொழுது, அதனைத் தாண்டும் சக்தி படைத்த ஆஞ்சநேயர் மௌனமாக அமர்ந்திருந்தார். மற்றவர்கள் எல்லாம் அவருடைய சக்தியை எடுத்துக் காட்டிய போது, அவர் கடலைத் தாண்டிச் சென்று மிகப் பெரிய சாதனைகளைச் செய்து திரும்பினார். சக்தியை (Potential) உணருங்கள். மற்றவருக்குச் சக்தியை உணர்த்துங்கள்.
?எது சுதந்திரம்?
– பாக்கியஸ்ரீ, விழுப்புரம்.
நம்மை நாமே நேசிப்பதுதான் சுதந்திரம்.
?அமைதிக்கான வழி என்ன?
– கலையரசன், திருத்தணி.
நம் தவறுகளை பிறர் சுட்டிக் காட்டும் பொழுது கோபப்படாமல் திருத்திக் கொள்வதும், நம்முடைய தவறுகளை நாமே ஆராய்ந்து திருத்திக் கொள்வதும், பிறர் தவறு செய்யும் பொழுது மன்னிப்பதும், பிறர் மீது உள்ள குற்றங்களை மெனக்கிட்டுச் சொல்லி அவர்களைச் சிறுமைப்படுத்திப் பகையைத் தேடிக் கொள்ளாததும், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதும், எந்தவிதமான பிரதி உபகாரமும் கருதாமல், மற்றவர்களுக்கு உதவி செய்வதும், எப்பொழுதும் தெய்வ சிந்தனையில் இருப்பதும் அமைதிக்கான வழிகள்.
?எது வரம்?
– சு.ரவிகுமார், லால்குடி.
நமக்கென்று சில தகுதிகளைக் கொடுத்து இந்த உலகத்தில் படைத்திருக்கின்றான் இறைவன். நம் தகுதிகளை நாம் ஆராய்ந்து பார்த்து அதனை நன்கு வளர்த்துக் கொண்டு வாழப் பழகுவதில்லை. நாம் எப்பொழுதும் மற்றவர்களாக ஆகத் துடிக்கிறோம். நாம் நாமாகவே இருப்பதில்லை. நாம் நாமாகவே இருப்பது என்பது ஒரு வரம்.
?ஒவ்வொரு வருடம் கடந்து போகும் போதும் நாம் எதை நினைத்துக் கொண்டு வாழ வேண்டும்?
– மதியழகன், சேலம்.
இதற்கு திருவள்ளுவர் அற்புதமான ஒரு குறட்பா சொல்லி இருக்கிறார்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு’’.
இந்த உலகத்துக்கு எத்தனை பெருமை இருந்தாலும், நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமைதான் சிறந்தது என்ற கருத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழ வேண்டும். ஒவ்வொரு வருடமும் நமக்கு இரண்டு விஷயங்களைக் கற்பிக்கிறது.
1. எதுவுமே இங்கு நிரந்தரம் இல்லை.
2. வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டே இருக்கிறது.
இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால், இருக்கும் நிம்மதியை தக்க வைத்துக் கொண்டு வாழலாம். இல்லாத நிம்மதி என்று எதையும் தேட வேண்டாம்.
?வாழ்க்கையின் சாரம் என்ன?
– பிரியா கார்த்திக், மயிலாப்பூர்.
வாழ்க்கை என்பது மிகப் பெரிய பணக்காரனாக இருப்பதையோ, மிகப் பிரபலமாக இருப்பதையோ, மிக அதிகமான பட்டங் களைப் பெற்று இருப்பதையோ சுட்டுவது அல்ல. வாழ்க்கை என்பது உண்மையாக இருப்பது, எல்லோரையும் மதிப்போடு பார்ப்பது, நடத்துவது, எல்லோரிடமும் அன்பாக இருப்பது. மனித வாழ்க்கையின் சாராம்சம் என்பது இதுதான். மானுடம் என்னும் சொல்லின் வேர்ச்சத்துக்கள் இந்த குணங்களில்தான் அடங்கி இருக்கின்றன. அதுதான் உலகத்தை வெல்வது. அதனால்தான் ராமாயணம் பாடிய கம்பன் மானுடம் வென்றதம்மா என்று பாடினான்.
?பண நெருக்கடி தீர எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
– வரதராஜன், திருவண்ணாமலை.
பணத்துக்கு அதிபதி மகாலட்சுமி என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் மகாலட்சுமிக்கு விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்யுங்கள். அதோடு பணம் விரயமாகும் வழியைக் கண்டுபிடித்து நீக்கிக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் தண்ணீர் பிடித்தாலும் ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் நிற்காது. உழைப்பதில் கவனம் செலுத்துங்கள். பத்து ரூபாய் சம்பாதித்தால் ஒன்று இரண்டு ரூபாயாவது சேமிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். வறுமையோ, பண நெருக்கடியோ எக்காலத்திலும் வராது.
?வடக்கு வாசல் நல்லதா? தெற்கு வாசல் நல்லதா?
– வே.சுந்தரேசன், சென்னை.
எந்த வாசலாக இருந்தாலும், நாம் வாழும்படி வாழ்ந்தால் நல்லதுதான். தெய்வ பக்தி எத்தனை தோஷங்களையும் போக்கிவிடும். அதனால்தான் அருணகிரிநாதர்; நாள் என் செய்யும்? வினைதான் என் செய்யும்?” என்று பாடினார். அந்தப் பாடலை கஷ்டம் வரும்போது பக்தியோடு ஓதுங்கள். அது எல்லாவிதமான தோஷங்களையும் போக்கி நல்வாழ்க்கையைத் தரும்.
?இறைவனிடம் இன்பத்தை பிரார்த்திக்க வேண்டுமா, வருகின்ற துன்பத்தை நீங்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டுமா?
– வித்யாபாலசேகரன், பட்டுக்கோட்டை.
முதலில் வருகின்ற இன்பம், துன்பம் இவை இரண்டும் இறைவன் அருளினாலோ, அருள் இல்லாததாலோ வருவது அல்ல. காரணம் இவை இரண்டையும் ஒருவருக்கு இறைவன் தருவது கிடையாது என்பது ஆன்மிகத்தின் அடிப்படையான கொள்கை. அப்படியானால், ஒருவன் நன்மை பெறுவதும் அல்லது துன்பப்படுவதும் அவரவர்கள் செய்த வினையின் பயன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் ஆன்றோர்கள் இறைவனுடைய அருள் வேண்டும் என்றுதான் பிரார்த்திப்பார்களே தவிர, அவனிடத்திலே இன்பத்தையோ துன்பம் நீக்குதலையோ பெரும்பாலும் பிரார்த்திப்பதில்லை. பட்டினத்தார்; “என் செயலால் ஆவது யாதொன்றுமில்லை, முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே” என்றார்.
அதைப் போலவே மணிவாசகரும் “வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்டிய அனைத்தும் தருவோய் நீ” என்றார். இறைவனை வழிபடுவதன் மூலம் துன்பம் நீங்குகிறதோ இல்லையோ துன்பத்தை நீக்கிக் கொள்ளும் வல்லமையைப் பெற முடியும். மகாபாரதத்தில் யுத்தமெல்லாம் முடிந்தபின் பாண்டவர்கள் ராஜ்ஜியத்தை அடைந்தனர். கண்ணன் விடைபெறும் பொழுது குந்தி கேட்ட வரம் “கஷ்டத்தைக் கொடு” என்பது. இதென்ன வித்தியாசமாக இருக்கிறது என்று நினைக்கலாம்.
அதற்கு குந்தி சொன்ன விளக்கமாகப் பெரியவர்கள் சொல்வதுதான் வித்தியாசமாக இருக்கும். ஏன் குந்தி கஷ்டத்தை கண்ணனிடம் கேட்டாள் தெரியுமா? “கண்ணா, எங்களுக்குக் கஷ்டம் வருகின்ற ஒவ்வொரு நிலையிலும் நீ எங்கள் கூடவே இருந்தாய். நீ எங்களுடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால் நீ எங்களுக்குக் கஷ்டத்தைக் கொடு”. இதனுடைய சூட்சுமமான பொருள்: பக்தர்களின் கஷ்டத்தின் பொழுது இறைவன் கூடவே இருந்து அவர்களுக்குக் கஷ்டத்தைத் தாங்கும் சக்தியைத் தந்து காப்பாற்றுகிறான் என்று பொருள்.
தொகுப்பு: தேஜஸ்வி
The post தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்? appeared first on Dinakaran.