சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: மகாதேவர் கோயில், தம்பிடி சுர்லா, கோவா மாநிலம்
காலம்: 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடம்ப வம்ச ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.
கோவா என்றாலே அழகிய கடற்கரைகளும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலங்களுமே நினைவுக்கு வரும். இன்றைய கோவா மாநிலத்தில் போர்த்துகீசியர்களால் எழுப்பப்பட்ட சர்ச்களும், கோட்டைகளும் நிறைந்திருக்கலாம். ஆனால், போர்த்துகீசியர்களின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடம்பவம்ச மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கோவாவில் ஏராளமான பெரும் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பின்னர் பீஜப்பூர் சுல்தான் படையெடுப்பு மற்றும் போர்த்துகீசியர்கள் ஆட்சியின் போது ஏறக்குறைய அனைத்து பழங்கால ஆலயங்களும் அழிக்கப்பட்டன. இத்தகைய அழிப்புகளில் தப்பிப் பிழைத்து கோவா பகுதியின் சிறப்பான தொன்மைக்கும், கோயிற் கட்டிடக்கலைக்கும் சாட்சியாய் நின்று கொண்டிருப்பது மலைகள் சூழ்ந்த அடர்ந்த காட்டினுள் அமைந்திருக்கும் ‘தம்ப்டி சுர்லா – மகாதேவர் ஆலயம்’ மட்டுமே!
பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்தினுள் மலைகளின் பின்னணியுடன் கூடிய இந்த சிறிய, அழகான, அமைதியான கோயிலுக்கு வாகனத்தில் செல்வது என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம். கோயிலின் ஓரத்தில் இயற்கை எழிலுடன் சிற்றாறு சலசலத்துச் செல்கிறது.அந்நியர் படையெடுப்பில் இருந்து தப்பியதற்கு மலைப்பாங்கான அடர்ந்த காட்டின் நடுவே மறைந்திருக்கும் அமைப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
இந்த 12 ஆம் நூற்றாண்டு பழமையான கடம்பர் பாணி கோயில், ‘குளோரிடிக் ஸ்கிஸ்ட்’ (Chloritic Schist stone) எனப் படும் ஒரு வகை கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது.கிழக்கு நோக்கிய இந்த சிவாலயம் கருவறை, அந்தராளம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றுடன் அமைந்திருக்கிறது. முக மண்டபத்தை ஹொய்சாளர்களின் (லேத் இயந்திர) கடைசல் பாணியில் செதுக்கப்பட்ட நான்கு அலங்காரத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. நடுவில் நந்தியின் (தற்போது தலையில்லாத) கல் சிற்பம் உள்ளது.
இரண்டு நிலைகளைக் கொண்ட நாகர பாணி விமானமானது, லட்சுமி-நாராயணன், வடக்கில் விஷ்ணு-ஜனார்த்தன், மேற்கில் நடனமாடும் சிவன் மற்றும் சிவன்-பார்வதி, தெற்கில் பிரம்மா, பைரவர் ஆகியோரின் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கோவாவின் கடம்பர் கோயில் கட்டிடக்கலையில் தனித்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்ற இந்தக்கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், வைணவ தெய்வ சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாலயம், தற்போது இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
The post கோவாவின் தொன்மை கூறும் ஒரே பழங்கால சிவாலயம் appeared first on Dinakaran.