ஜபமாலை தந்த சற்குருநாதா!
‘விதைக்குள்ளே இருக்கிறது விசுவ ரூபம்’ என்று பாடுகிறார் கவிஞர் ஒருவர்.சின்னஞ் சிறியது தான் வித்து. ஆனால் அதற்குள் பென்மை பெரிய விருட்சம் ஒன்று மறைந்துள்ளது என நாம் அறிவோம்.அவ்வாறே அருணகிரிநாதர் பழனித் தலத்தில் பாடியருளிய இத்திருப்புகழ் எட்டே வரிக்குள் நம் அறிவிற்கு எட்டாத பெரிய விஷயங்களை உள்ளடக்கியுள்ள தூய உபதேசம், மந்திரம், ஜபமாலை, சற்குருநாதர் என மந்திரப் பதங்களைக் கொண்டுள்ள, இத்திருப்புகழ் நம் அன்றாட பாராயணத்தில் அவசியம் இடம் பெறவேண்டும்.
அபகார நிந்தைபட்டு உழலாதே!
அறியாத வஞ்சரைக் குறியாதே!
உபதேச மந்திரப் பொருளாலே!
உனைநான் நினைந்து அருட்பெறுவேனோ!
இபமாமுகன் தனக்கு இளையோனே!
இமவான் மடந்தை உத்தமி பாலா!
ஜபமாலை தந்த சற்குருநாதா!
திருஆவினன்குடிப் பெருமாளே!
இவ்வுலகில் வாழும் நாம் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த உயர்ந்த ஒழுக்க நெறிகளை நன்கு பயின்று அவற்றின் வழி நடைபோடவேண்டும். தீயவற்றின் திசை பக்கம் கூட நாம் திரும்பக் கூடாது. நம் ஆன்மிகப் பெரியவர்கள் தம் பிரார்த்தனையில் இறைவனிடம் பொன்னும், பொருளும், போகமும் கேட்கவில்லை.
‘அன்பும் அருளும் அறனும் தருவாய் இறைவனே!’
– என்றுதான் இறைஞ்சினார்கள். நம் மூதாகையர்கள் மாளிகை வேண்டும். ஆடம்பர அணிமணிகள் வேண்டும். ஆடி கார் வேண்டும் என்றெல்லாம் ஆசைக் கடலில் அனுதினம் மூழ்கி அவதியுறும் நெஞ்சோடு அலையவில்லை.
‘அதுவேண்டும்! இது வேண்டும்’ என பேராசைப் பேய் இக்காலத்தில் பல மனிதர்களைப் பற்றிக் கொண்டு விட்டதால் மண், பொன், பெண்மது, சூது என வழிதடுமாறுகிறார்கள். இதைத்தான் இப்பாட்டின் முதலிரண்டு வரிகளில் குறிப்பிடுகிறார் அருணை முனிவர் ‘உபகாரம்’ செய்வதற்காக இம்மானிப் பிறவி உருவாகியுள்ளது. ‘பரோபகாரம் இதம் சரீரம்’ என்ற முன்னோர் வாசகத்தை உணர்ந்து உபகாரம் செய்ய வேண்டும். நாமோ பழிபாவங்களுக்கு அஞ்சாமல் பஞ்சமா பாதங்களை கொஞ்சம் கூட கூசாமல் சர்வ சாதாரணமாக பலர் செய்து வருவதை அறிகின்றோம்.
அபகார நிந்தைபட்டு உழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
– என இரண்டே வரிகளில் இன்றைய மக்களுக்கு புத்திமதி புகல்கிறார் அருணகிரிநாதர்.
மகான் ராமலிங்க வள்ளற்பெருமான் ‘அபகார நிந்தைபட்டு உழலும் வஞ்சக நெஞ்சினரின் பாவச் செயல்களைப் பட்டியல் இடுகிறார்.
சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்!
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தனோ!
நட்டாற்றில் கை நழுவ விட்டேனோ!
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ!
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகம் செய்தேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
குருவை வணங்க கூசி நின்றேனோ!
மேற்கண்ட பாவங்களை கொஞ்சமும் பதட்டம் இன்றி இக்காலத்தில் பலர் செய்கின்றனர் என்பதை தினசரி செய்தித்தாள் படிக்கும் அனைவரும் அறிந்து
கொண்டுள்ளோம் அல்லவா.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க! பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்!
என்கிறார் திருவள்ளுவர்.
அதனால்தான் பட்டுமெத்தை, பஞ்சணை, குளிர்சாதன வசதி இருந்தும் உறக்கம் வராமல் பலபேர் உருண்டும் புரண்டும் தவிக்கிறார்கள். இதையும் அருணகிரிநாதர் தம்
திருப்புகழில் பதிவு செய்கிறார்.
‘அறம் இலா அதிபாதக வஞ்சக் தொழிலாலே
அடியனேன் மெலிவாகி மனம் சற்று
இளையாதே
சிறல்குலாவிய சேவடி வந்தித்து அருள்கூட
தினமுமே மிக வாழ்வுறும் இன்பைத்
தருவாயே!
நிம்மதியான நெஞ்சம், அமைதியான அன்றாட வாழ்க்கை,
அன்பான குழந்தைகள், அரவணைக்கும் உறவு
மேற்கண்ட அனைத்தும் பழிபாவங்களுக்கு அஞ்சி
நற்செயல் புரியும் அனைவர்க்கும் வாய்க்கும்
உபதேச மந்திரப் பொருள் உரைத்து, ஜபமாலை தந்து அருணகிரியாரைப் போல் நம்மையும் ஆட்கொள்வார் ஆறுமுகப்பெருமான்.
ஆசைகோபம் களவு கொள்பவன்
பேசக் தெரிந்த மிருகம்!
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!
இதில் மிருகம் என்பது கள்ளமனம்!
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்!
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசனின் பாடலை அர்த்தம் உணர்ந்து கடைபிடிப்போம்!
அருணகிரிநாதரை ஆட்கொண்ட
ஆறுமுகப்பெருமானின்
ஒருமுகம் ‘கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம்’
என்று உணர்ந்து குமரவேளைக்
கும்பிடுவோம்! குறைகளைக் களைவோம்!
தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்
The post திருப்பம் தரும் திருப்புகழ்! 22 appeared first on Dinakaran.