விஷ்ணுவை போல் தோற்றம் கொண்ட முருகன்
“இந்த முருகப் பெருமான் எத்தகைய தோற்றத்தில் இருக்கிறார்?’’ (பால முருகனா, சரவணனா, கதிர்வேலனா..?) என்று அவரிடத்தில் ஊர் பொது மக்கள் கேட்க, முருகப் பெருமானை சில நிமிடங்கள் உற்று நோக்கிய பீடாதிபதி,
“இந்த கோயிலில், முருகப் பெருமான் பாலகனாக இல்லாமல், விஷ்ணுவை போல் உயர்ந்த உயரத்தில் இருப்பதாலும், அவரைப் போலவே ஆஜானுபாகுவாக இருப்பதாலும் இவருக்கு `வெங்கட சுப்ரமணிய ஸ்வாமி’ என்று பெயர் சூட்டி, அதை ஊர் மக்கள் முன்பும் கூறிவிட்டு சென்றார். அன்று முதல் ஊர் மக்களும் அதனை ஏற்று சுப்ரமணிய ஸ்வாமியை, `வெங்கட சுப்ரமணிய ஸ்வாமியாக’ அழைக்க தொடங்கினர். மேலும், கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் ஒரு முறை இந்த கோயிலுக்கு விஜயம் செய்த போது, அவரிடத்தில் முருகனை குறித்தும், பீடாதிபதி தெரிவித்த கருத்துக்களை குறித்தும் தெரிவிக்கப்பட்டது. உடனே..
“ஆம்… மிக பொருத்தமான பெயர். என் கண்களுக்கும் அப்படித்தான் முருகப் பெருமான் தெரிகிறார்’’ என்று கூறிவிட்டு சென்றார். ஆகையால், சுப்ரமணியனாக இந்த கோயிலுக்கு வந்த முருகன், இன்று அனைவரையும் வெங்கட சுப்ரமணியனாக அருள்பாலித்து வருகின்றார். அப்போது கோயில் மிக சிறிய அளவில் மட்டுமே இருந்தது. காலங்கள் உருண்டோட..
கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள்
1982ல், வளசரவாக்கத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி என்பவர் இந்த கோயிலுக்கு லேஅவுட் அமைத்துதர வந்திருக்கிறார். அந்த சமயத்தில், தாமே இந்த கோயிலை கட்டி புனரமைக்கலாமே? என்று அவர் மனதில் தோன்ற, 1982 ஆம் ஆண்டு காலகட்டத்தில், புனரமைப்பதற்காக பூமி பூஜை செய்து, சுமார் பத்து ஆண்டுகாலமாக கோயிலுக்குள் இருக்கும் ஒவ்வொரு இடமாக சிறுகச் சிறுக புனரமைத்து, 1993ல் கும்பாபிஷேகம் மிக பிரம்மாண்டமான அளவில் நடத்தி முடிக்கப்பட்டது. அதன்பின், 32 வருடங்கள் கடந்தாகிவிட்டன. இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தடைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதற்கு நடுவில் கொரானா தொற்று வேறு வந்துவிட்டது. அதில் ஒரு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படியாக கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்த வருடம்தான் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி, வரும் ஒன்பதாம் மாதம் அதாவது செப்டம்பர் மாதம், கும்பாபிஷேகம் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒரே அளவிலான முருகன்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இருக்கும் முருகனும், இந்த வளசரவாக்கம் வெங்கட சுப்ரமணியஸ்வாமி கோயிலில் இருக்கும் முருகனும், ஒரே அளவிலான முருகன் சிலையாகும். பீடத்துடன் சேர்த்து 6.5 அடிகளாகவும், பீடம் இல்லாமல் தனியாக 6.2 அடி அடிகளாகவும் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், வல்லக்கோட்டை முருகன், வள்ளி – தெய்வானையுடன் காட்சியளிப்பார். வெங்கட சுப்ரமணியஸ்வாமி, தனியாக காட்சியளிக்கிறார்.
வேண்டியது கிடைக்க எலுமிச்சை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் “சிறுவாபுரி பாலசுப்பிரமணியர்’’ கோயிலில் எலுமிச்சைப் பழம் வேண்டுதல் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதென்ன எலுமிச்சை பழம் வேண்டுதல்? அதாவது, கோயில் வாசலில் எலுமிச்சைப் பழம் விற்பார்கள். திருமணம், குழந்தை போன்ற வரம் வேண்டுவோர்கள், அதனை வாங்கிக் கொண்டு கோயில் அர்ச்சகரிடத்தில் கொடுக்க வேண்டும். அவர் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொடுப்பார். இது போல், ஒன்பது, ஏழு அல்லது ஐந்து வாரம் தொடர்ந்து வேண்டிக் கொண்டால் வேண்டியது கிட்டும்.
அதேபோல், இந்த வளசரவாக்கம் வெங்கட சுப்ரமணியஸ்வாமி கோயிலிலும், பிரதி செவ்வாய்க் கிழமை அன்று, இரண்டு எலுமிச்சை பழத்தை அர்ச்சகரிடத்தில் கொடுத்து தங்களது பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இரண்டு எலுமிச்சைப் பழத்தில், ஒன்றை நம்மிடத்திலேயே அர்ச்சகர் கொடுத்துவிடுவார். அதை பெற்று, வீட்டிற்கு வந்தவுடன் எலுமிச்சை ஜூஸ் செய்து குடிக்க வேண்டும்.
இப்படி தங்களின் வசதிக்கு ஏற்ப, குறைந்தது ஏழு வாரங்கள் முதல் பதினொன்று வாரங்கள் வரை எலுமிச்சைப் பழம் வேண்டுதல் செய்யலாம். மிக முக்கியமாக திருமணமாகாதவர்கள் வேண்டினால் விரைவாக திருமணம்
நடைபெறுகிறது.
எண்ணற்ற பல திருமணங்கள்
இந்த கோயிலில், திருமணமாகாதவர்கள் வேண்டிக் கொண்டால் உடனடியாக திருமணம் நடைபெறுகிறது. சிலர், இந்த கோயிலேயே திருமணத்தை நடத்துகிறார்கள். இப்படி, இந்த கோயிலில் பல திருமணங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது, கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், கோயிலுள் நடைபெறும் திருமணங்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் மீண்டும் இந்த திருக்கோயிலில் திருமண வைபவங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிற சந்நதிகள்
வெங்கட சுப்ரமணிய ஸ்வாமியை தரிசித்துவிட்டு பிராகாரத்தை வளம் வரும்போது, சிவபெருமான், மீனாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுபகவான், ஆஞ்சநேயர் ஆகிய சந்நதிகளை தரிசிக்கலாம்.
விழாக்கள்
தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதே போல், பங்குனி உத்திரம் அன்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் கும்பாபிஷேக கைங்கரிய தொடர்புக்கு: எஸ்.பரமேஸ்வரன் – 9841289251.
எப்படி செல்வது: 14வது தெரு, சுப்ரமணிய சுவாமி நகர், வளசரவாக்கம், சென்னை, தமிழ்நாடு – 600087 (வளசரவாக்கம் கேசவர்தினியை கடந்து செல்ல வேண்டும்)
கோயில் திறந்திருக்கும் நேரம்: தினமும் காலை 6.30 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 முதல் 08.30 வரையிலும் கோயில் திறந்திருக்கும். செவ்வாய் மட்டும் சற்று அதிக நேரத்தில் நடை திறந்திருக்கும்.
The post அழகென்ற சொல்லுக்கு முருகா… appeared first on Dinakaran.