விரும்பித் தொழும் அடியார்
கடந்த இதழில், தொன்னூற்றி மூன்றாவது பாடலை பார்த்தோம். அதில் இன்னும் சில விளக்கவுரைகள் இருக்கின்றன. அதை பார்த்த பின்னர், தொன்னூற்றி நான்காவது அந்தாதியை பற்றி பார்ப்போம். சாத்திரங்கள் உமையம்மையின் வடிவத்தை பொருத்தவரை வ்யோம, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சா என்று ஐந்து வகையான இறை வடிவங்களை குறிப்பிடுகிறது. வ்யோம என்பதனால் மந்திர வடிவத்தையும், வ்யூக என்பதனால் யந்திர வடிவத்தையும், விபவ என்பதனால் ஆலய வடிவத்தையும், அந்தர்யாமி என்பதனால் பார்ப்பவன் வடிவத்தையும், அர்ச்சா என்பதனால் கோயில்களில் எழுந்தருளி இருக்கும் விக்ரஹ வடிவத்தையும் குறிப்பிடுகிறது. இதில் அர்ச்சாவதாரத்தையும் விபவ என்னும் ஆலய வடிவத்தையும் அமைக்கும்போது உமையம்மையின் உண்மையான தோற்றத்தை தியானித்து அவள் எழுந்தருளிய வண்ணமே உருவங்களை அமைக்க வேண்டும். அதற்கு சிற்பிகள் பெரும்பாலும் புராணங்களையும் தத்துவ நூல்களையும் நோக்கி அதில் குறிப்பிட்ட வண்ணம் உமையம்மையின் திருமேனி மற்றும் ஆலயத்தை அமைப்பர்.
அந்தந்த இடம், காலம், நிகழ்வு இவற்றைச் சார்ந்து உமையம்மையின் திருமேனிகளை கோபுரத்தின் மேற்பகுதி மற்றும் மூலஸ் தானத்தின் உட்பகுதியிலும் அமைப்பர். கிராம தேவதைகளான பேச்சியம்மனை நெஞ்சு குழிவிழுந்த பஞ்சடைந்த மார்புடனும், பாலாம்பிகையை குறும்பை முலையுடனும் காளியை பருத்த ஸ்தனம் உடையவராயும் வடிவமைப்பர். கஜசம்ஹார மூர்த்தியின் சக்தியாகிய குசாம்பிகையின் கண்கள் மருண்ட பார்வையுடனும் [கரியுரி போர்த்த சேவகன்] காளியின் பார்வையை முழுக் கண்ணையும், தவம் செய்கிற தவக்கோல காமாட்சிக்கு பாதி மூடிய கண்ணையும் அமைப்பர்.
பார்வதியை மலைமகள் என்பதை சூட்டும் வகையில் அமைப்பர். மதங்கள் குலப் பெண்களில் தோன்றிய உமையம்மையின் வடிவை நாட்டியத்திற்குரிய அணிகலன்களுடன் அழகு பொருந்தியவளாய் அமைப்பர். தேவர் குல பெண்ணாக உமையம்மையை காட்டும்போதும் தலையிலே கிரீடத்துடன் அமைப்பர். அபிராமிபட்டர் ஒரே சக்தியான உமையம்மையின் பல்வேறு வடிவங்களை குறிப்பிடுகிறார். ‘ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து’ (56) என்றும். ‘நாயகி, நான்முகி, நாராயணி’ (50) என்று பல்வேறு வடிவத்தில் உள்ள உமையம்மையின் வடிவத்தை அறிந்து அதன் வழிவெவ்வேறு சிறப்பான பயனை மனிதர்கள் அடைய முயல்வதையே ‘‘இவள் தன் தகைமையே நாடி விரும்புவதே” என்கிறார். அதை அறிந்து அடைய முயல்வோம்.
‘`அந்தமாக’’“நகையே” என்பதனால் சிரிப்பிற்கு இடம் அளிக்கிறது.
“இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு முகையே முகிழ் முலை” என்பதனால் இந்த உலகத்தை எல்லாம் ஈன்றெடுத்த உடல் சோர்ந்த முதுமையான தாய்க்கு மொட்டு போன்று முலை இருப்பது.“மானே முதுகண் முடிவில்” என்பதனால் மான் போன்ற மருட்சி பார்வையை கொண்ட அழகான இளம் பருவ கன்னியரின் கண்ணில் முதுமையான அனுபவ அறிவு பெற்ற நோக்கு இருப்பதும் “அந்த வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம் மிகையே” என்பதனால் கண்ணையும் முலையையும் பிறவியை பற்றியதும் முரண்பட்ட கருத்தே. மலைமகள் என்று ஓர் இனத்திற்கு சொந்தமானவளாக குறிப்பிடுவது என்பது நாம் அவளைப் பற்றி சற்று அதிகமாகவே சொன்னதாகவே ஆகிறது.
“இவள் தன் தகைமையே நாடி விரும்புவதே’’ என்பதால் வணங்குபவர்களாகிய நமக்கு பயன்படும் மிக உயர்ந்த வரத்தை பெறவே இவ்வாறாக உயர்த்தி கூறி வழிபடுகிறோம். உமையம்மையின் கருணையைப் பெறவே இப்படி நகைக்கும்படிபோற்றுகிறோம்.
‘‘இனி அடுத்த பாடலை பற்றி சிந்திப்போம்”
“விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி, மெய்ப்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி, அறிவிழந்து,
சுரும்பிற் களித்து, மொழிதடு மாறி முன்சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே’’.
– தொன்னூற்றி நான்காவது அந்தாதி
‘`ஆதியாக’’
பொதுவாக உலகியலில் உள்ளோர் ஆலயங்களுக்கு சென்று சில பொருட்களை வைத்துக்கொண்டு அங்கு நிறுவப்பட்டிருக்கும், இறைத்திருமேனிக்கு அபிஷேகம் [நீராட்டல்] அலங்காரம் [ஒப்பனை] அர்ச்சனை [போற்றி] ஹோமம் [வேள்வி] இவைகளை அர்ச்சகர்கள் மூலமாக செய்வதையே பூஜை என்றும் அதனால் நம் ஆசைகள் நிறைவேறும் என்றும் நினைத்துச் செய்கிறார்கள். அதன் மூலம் சில பயன்களையும் பெறுகிறார்கள். அபிராமி பட்டரோ இறைவியின் மீது அன்பு செலுத்துகிறார், எந்தவித எதிர்பார்ப்புமின்றி செலுத்துகிறார், அதனால் தான் நினைத்ததை எல்லாம் அடைகிறார். அந்த அன்பின் அடையாளத்தையே இப்பாடல் விளக்குகிறது. இனி பாடலுக்குள் நுழைவோம்.
“அந்தாதி பொருட்சொல் வரிசை”
* விரும்பித் தொழும் அடியார்
* விழிநீர்மல்கி
* மெய்புளகம் அரும்பி
* ததும்பிய ஆனந்தமாகி
* அறிவிழந்து
* சுறும்பிற் களித்து
* மொழி தடுமாறி
* முன் சொன்ன எல்லாம் தரும்
* பித்தர்
* ஆவரென்றால்
* அபிராமி சமயம்
* நன்றே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதை இனி காண்போம்.
“விரும்பித் தொழும் அடியார்’’
“விருப்பம்” என்பது நான்கு வகைப்படும்
* தன்னைத்தானே விரும்புவது
* தன்னைச் சார்ந்தோரான தாய், தந்தை போன்ற உறவினரை விரும்புவது.
* தன்னை ஒத்த பண்புடையோரை விரும்புவது
* தனக்கு மகிழ்ச்சி தரும் பொருள்களை விரும்புவது
இந்த விருப்பங்களிலிருந்தும் முற்றிலும் மாறானது கடவுளின் “விருப்பம்”. தன்னை விரும்புவது இயல்பு. பெற்றோரை விரும்புவது இரத்த பந்தத் தொடர்பு. தனக்கு எது பிடிக்குமோ அதையே பிறர் செய்யும் போது அதனால் ஏற்படும் “விருப்பம்”. அதற்கு காரணம் எண்ணமும் செயலும் ஒன்றுபட்டிருப்பது. தனக்கு பாதுகாப்பு, மகிழ்ச்சி, புகழ் போன்ற தேவை, ஆசையை நிறைவு செய்யும் பண்பையே “விருப்பம்” என்கிறார். இந்த நான்கினையும் மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம், புத்தி இவைகளினால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் வழி அனுபவிக்கவும் முடிகிறது. ஆகையால் இவைகளில் “விருப்பம்” தோன்றுவது சிறப்பில்லை பொதுப்பண்பே. ‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத’ (87) பண்புடைய உமையம்மையை இவ்வகையில் நேசிக்க முடியாது. ஆனால் பட்டரோ உமையம்மையின் அருளை உணர்ந்ததால் இவை எல்லாவற்றையும் விட அதிகமாக உமையம்மையே விரும்புகிறார்.
அத்தகைய விருப்பமானது தன்னியல்பினால் தோன்றியது அல்ல. தாய் தந்தை போல இரத்த பந்தத்தினால் தோன்றியதும் அல்ல, தன்னை ஒத்த பண்புடையவள் என்பதனாலும் அல்ல, தனக்கு மகிழ்ச்சி தரும் பொருளான புகழ், தேவை, ஆசை இவற்றை அவள் நிறைவு செய்வாள் என்பதும் அல்ல, உமையம்மையின் உண்மை பண்புகளை அவளின் அருளினாலே உணர்ந்து அதையே நேசிக்கிறார். அந்த பண்பானது உமையம்மையை விட்டு என்றும் நீங்காது. அதுபோல பட்டர் அபிராமியின் மீது கொண்டுள்ள விருப்பமும் என்றும் மாறாது. அத்தகைய விருப்பத்தை உடைய பக்தர்களையே “விரும்பித் தொழும் அடியார்’’ என்கிறார்.
“விழிநீர்மல்கி’’
இந்த சொல்லானது இறைவியை வணங்கும் போது ஏற்படும் இரண்டு விதமான அடையாளங்களான அக மற்றும் புற அடையாளத்தில் வெளிப்படையாக தோன்றும் புற அடையாளத்தையே இங்கே குறிப்பிடுகிறார். கோயிலில் உள்ள இறைத்திருமேனியைக் கண்டவுடன் அன்பின் மிகுதியால் கண்களில் கண்ணீர் தோன்றும். அதையே “விழிநீர்” என்கிறார். “மல்கி’’ என்பதனால் உள்ளுணர்வினால் தோன்றிய அழுகையாக அது இருக்கும்.
இந்த அழுகையானது மிகுந்த சோகம், உடலில் ஏற்படும் உபாதி இவற்றினால் தோன்றியது அல்ல, முழுவதும் உமையம்மையின் மீது கொண்ட அன்பினால் தோன்றுகின்ற ஆனந்தத்தின் வெளிப்பாடு, மேலும் தொடர்ந்து கண்ணீர் பெருகிக் கொண்டே இருக்கும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் சூழலை பார்க்காது. உமையம்மையை தாயாகவோ, மகளாகவோ, அரசியாகவோ, தலைவியாகவோ கருதுவதால் இவ்வடையாளம் தோன்றும். இதையே “விழிநீர்மல்கி’’ என்கிறார்.
“மெய்புளகம் அரும்பி’’
‘`மெய்’’ என்பது உடலையும் ‘`புளகம்’’ என்பது உடல் முழுதும் பரவி முளைத்துள்ள முடியையும் குறிக்கும். “அரும்புதல்” என்பது உடலில் படிய இருக்கும் முடியானது உள் உணர்வுகளால் சில நேரங்களில் குத்திட்டு நிற்கும். காதல், அன்பு, வியப்பு, எதிர்பார்த்தது நடத்தல், கடவுள் பக்தி, இசை மற்றும் ஆன்மிக சூழலில் இவ்வுணர்வு தோன்றும். அபிராமி பட்டர் உமையம்மையின் அர்ச்சாவதார மூர்த்தியைக் காணும் போதும் தியானம் செய்யும் போதும், உமையம்மையிடம் பேசும் போதும், ஜபம் செய்யும் போதும் இத்தகைய உணர்வுகள் தோன்றும் என்பதையே “மெய்புளகம் அரும்பி’’ என்கிறார்.
“ததும்பிய ஆனந்தமாகி’’
“ததும்பிய” என்பதால் அன்பு, காதல், பக்தி இது போன்ற உணர்வு அளவைக் கடக்கிற போது ஆனந்தம் தோன்றுகிறது. “ஆனந்தம்” என்பது ஐந்து வகையாக
சாத்திரங்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
* உடல் ஆனந்தம் என்பது பிறந்த குழந்தைக்கு ஏற்படுவது. ஆன்மா உடலை பெற்ற மகிழ்ச்சியில் அது சிரிக்கிறது. பூர்வஜென்மத்தில் உடலை விட்ட துக்கத்தில் அழுகிறது. பிறந்த குழந்தையின் ஓர் ஆண்டுக்குள் மட்டுமே உடல் உபாதி, பசி போன்றவை அல்லாமல் வேறு புறக் காரணமின்றி ஏற்படும் மகிழ்ச்சியும் அழுகையையுமே இங்கே ஆனந்தம் என்று குறிப்பிடுகிறார்.
* உள்ள ஆனந்தம் என்பது காரணம் இன்றி மகிழும் மனம். இது திடீரென்று மனதில் தோன்றும் வெறுமையினால் ஏற்படும் மகிழ்ச்சி. இது புறக் காரணங்களால் பதிவு செய்யும் நினைவுகளால் ஏற்படுவது இல்லை.
* அறிவானந்தம் என்பது காரண காரியங்களால் எண்ணப் பதிவு சார்ந்து வரப்போகும், வந்த, வந்து கொண்டிருக்கின்ற சூழலினாலும் அனுபவத்தினாலும்
ஏற்படுவது.
* ஆத்மானந்தம் உடலை விட்டு உயிர் முழுவதுமாய் நீங்கும்போது உயிரானது வேறு ஒரு உடலுக்குள் நுழையும்போது ஏற்படுவது.
* சிவானந்தம் என்பது ஆன்மாவுக்கு இறைவியானவள் தன்னை ஒத்த தன்மையை வழங்கும் போது ஏற்படுவது.
இத்தகைய ஆனந்தத்தை “ததும்பிய ஆனந்தமாகி” என்கிறார்.
(தொடரும்)
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.