காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய காஞ்சிபுரம் சுன்னத் ஜமாஅத் ஈத்கா மஸ்ஜித் பள்ளிவாசல், தேரடியில் உள்ள கைரூல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், முதல் ஓரிக்கை மஜித் பள்ளிவாசல், சதக்கத்துல்லா கான் மஜித் பள்ளிவாசல், ரெட்டிபேட்டை ஹமீதியா மதரஸா பள்ளிவாசல், ஹைதர்பேட்டை ஹைதர் ஷா பக்கீர் மஸ்ஜித் பள்ளிவாசல், ஷேக் பேட்டை இஸ்பந்தியர் மஸ்ஜித் பள்ளிவாசல் ஆகியவற்றில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்திவிட்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இதுபோல், நசரத்பேட்டை ஷேக் முகமது அலி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல், ஏரிக்கரை மஸ்ஜித் தே காதிர் அல்லா பத், வாலாஜாபாத் பகுதியில் ஏகனாம்பேட்டை மதினா மஸ்ஜித், வாலாஜாபாத் பெரிய மஸ்ஜித், உத்திரமேரூர் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல், பெரும்புதூர் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் என காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கிளை சார்பில், பெருநாள் (ரம்ஜான்)திடல் தொழுகை அரக்கோணம் சாலையில் தனியார் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் ஜவ்ஹித் கலந்துகொண்டு பெருநாள் சொற்பொழிவு ஆற்றினார். இதில் மாவட்ட துணை தலைவர் அன்சாரி, துணைச் செயலாளர் ஆசிப், மாவட்ட மருத்துவ அணி சார்புதீன், கிளை செயலாளர் சாகுல் ஹமீது, நிர்வாகிகள் யூசுப், சாகுல், பாசில் உள்பட 1000 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். முன்னதாக 5 லட்சம் மதிப்பில் 1500 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் அறுசுவை உணவு வழங்கினர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு நத்தம் மசூதி மலைத் தெருவில் உள்ள மிகப்பழமையான செங்கல்பட்டு சுற்றுவட்டார பள்ளிவாசல்களில் தலைமை பள்ளி வாசலாக விளங்கும் ஈதுகா பள்ளி வாசல், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மக்கா பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை வெளிப்படுத்தினர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் டோல்கேட்டில் உள்ள ஜாமியா மசூதிக்கு சொந்தமான ஈத்கா மைதானம் என்னும் திடலில் இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது தலைமை இமாம் உமர் அன்வாரி சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் ஜாமியா மசூதி தலைவர் ஈக்காடு கே.முகமது ரஃபி, சாகுல் ஹமீத் அமீர்ஷாப், செயலாளர் எஸ்.கே.சேட்டு, பொருளாளர் சாதிக் பாஷா, துணைத் தலைவர் அப்துல் மஜீத், நிர்வாகி ஷா நவாஸ், கலில், இளைஞர் அணி தலைவர் இலியாஸ், செயலாளர் அபீபுல்லா, பொருளாளர் ஆரிப் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டு ஈது பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
The post காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: சிறப்பு தொழுகைகள் நடத்தி வாழ்த்துகளை பரிமாறினர் appeared first on Dinakaran.