புதுக்கோட்டை, மார்ச் 30: இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றும் தமிழக அரசும் திமுகவும் உறுதுணையாக இருக்கும் என்று புதுக்கோட்டையில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசினார். புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.
இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களுடன் இணைந்து தொப்பி அணிந்து நோன்பு திறந்து பேசியதாவது,
சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை ஒன்றிய அரசை கண்டித்து கொண்டு வந்துள்ளார். ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வக்ப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். அதனை சட்டமாக்கி விடக்கூடாது. அது சட்டமானால் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எடுத்துக் கூறி ஒன்றிய அரசு அந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வக்ப் மசோதா என்பது இஸ்லாமின் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் நீர்த்துப் போகும் வகையிலே இஸ்லாமிய சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் புதிதாக சட்டத்திருத்தத்தை கொண்டு வருவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் இஸ்லாமியர்களின் குரலாக ஒலித்திருக்கிறார். சட்டத்திருத்தம் கொண்டு வரும்பொழுது ஒரு சிலவற்றை மாற்றுவது தான் சட்ட திருத்தம். ஆனால் பழைய சட்டத்தை அப்படியே மாற்றுவது சட்ட திருத்தம் அல்ல.
இஸ்லாமிய சொத்துக்கள் இதுவரை கால அளவு கிடையாது. நூறாண்டுகள் ஆனாலும் 200 ஆண்டுகள் ஆனாலும் அந்த சொத்துக்கள் வக்ப் சொந்தமான சொத்துக்கள் தான். ஆனால் தற்போது கொண்டு வந்துள்ள திருத்த சட்டத்தில் 30 ஆண்டுகள் தான் என்று கால வரையறை கொண்டு வந்துள்ளனர். இதுபோன்ற கால நிர்ணயமும் செய்துள்ளது கண்டிக்கத்தக்க ஒன்று. இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் நோன்பை கடைபிடிக்கக்கூடிய நிலையில் இந்திய அளவில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒருவராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார். யாருக்கும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றும் இந்த அரசும் திமுகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
மேலும், மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாக்கத் அலி மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இஸ்லாமிய பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமங்களில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றும் தமிழக அரசும், திமுகவும் உறுதுணையாக இருக்கும்: நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேச்சு appeared first on Dinakaran.
