வேலூர், ஜன.12: ஏற்கனவே உள்ள கேமராக்களை சரிசெய்ய பொங்கல் பண்டிகையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வேலூர் எஸ்பி அறிவுறுத்தி உள்ளார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்பி மயில்வாகனன் தலைமை தாங்கி பேசியதாவது: காவல் நிலையத்திற்கு வரும் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை புதிதாக பொருத்த வேண்டும்.
ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம் மற்றும் மணல் திருட்டு, போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வழக்கு குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கையும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுவிலக்கு, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க, வாகன தணிக்கை வேண்டும்.
விபத்துக்கள் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும். பைக்கில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும். குற்ற சம்பவம் தடுப்பதற்காக பகல் மற்றும் இரவு ரோந்து அதிகப்படுத்த வேண்டும். சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், எஸ்சி, எஸ்டி வழக்குகள் குறித்தும், பெறப்படும் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டி சான்றிதழ்களை எஸ்பி வழங்கினார்.
