மயிலாடுதுறை, மார்ச் 28: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி பகுதியில் டிஆர்ஓ உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். நேரடி நெல் கொள்முதல் நிலையம், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதன் பின்னர் மணல்மேட்டில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
பள்ளியில் கழிவறை கட்டுமான பணியை ஆய்வு செய்த அவர் பணிகளை தரமாக செய்ய வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் கூறினார். தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்த வருவாய் கோட்டாட்சியர், மாணவர்களை தமிழ் பாடங்களில் இருந்து சில பகுதிகளை வாசிக்க சொல்லி கேட்டார். அதன் பின்னர் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம், பாடத்தை அர்த்தத்துடன் சொல்லி மாணவர்களுக்கு புரிய வைத்தால் மட்டுமே நல்ல முறையில், அவர்கள் மதிப்பெண் பெற முடியும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட பள்ளியில் ஸ்விட்ச் போர்டுகள் உடைந்த நிலையில் மின்விசிறிகள் இயங்காமல் இருந்தது. மின்விசிறிகள் இல்லாமல் மாணவர்கள் எப்படி புழுக்கத்தில் படிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பிய வருவாய் கோட்டாட்சியர் அதனையும் சரி செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார்.
The post மணல்மேடு ஆண்கள் பள்ளியில் ஆய்வு: மாணவர்களுக்கு அர்த்தத்துடன் பாடங்களை புரியவைக்க வேண்டும் appeared first on Dinakaran.
