யூடியூப் பார்த்து துணிகரம் விமானத்தில் `பறந்து’ வந்து ஏடிஎம்மில் திருடிய கும்பல்: ராஜஸ்தானில் பதுங்கி இருந்த 5 பேர் சிக்கினர்

திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ரவிரியாலா பகுதியில் கடந்த 2ம்தேதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மை கேஸ் கட்டர் மூலம் உடைத்து அதில் இருந்த ரூ.29.69 லட்சத்தை கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் சுதீர்பாபு உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. ராஜஸதானில் பதுங்கிய 5 பேரை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

இதுகுறித்து கமிஷனர் சுதீர்பாபு நேற்றுமுன்தினம் இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரவிரியாலா பகுதியில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த ராகுல்கான் (25) என்பவர் மூளையாக செயல்பட்டு வந்தார். இவர் ஐதராபாத் பஹாடி ஷெரீப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியபடி ஜேசிபி மெக்கானிக் வேலை செய்து வந்தார். அங்கிருந்தபடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஏடிஎம்களையும் நோட்டம்விட்டு வந்தார்.

பின்னர் தனது உறவினர்களான ராஜஸ்தானை சேர்ந்த முஸ்தகீம்கான் (28), ஷாருக்பஷீர்கான் (25), ரபீக்கான் (25), ஜாஹுல் பதான்கான், வாஹித்கான் (18), ஷகீல்கான், பர்வேஸ், அரியானாவைச் சேர்ந்த சுத்பின்கான் (28), பீகாரைச் சேர்ந்த முகமது சர்பராஸ் (28) ஆகியோரை வரவழைத்து கொள்ளையடித்துள்ளார். இதற்காக அவர்கள் விமானத்தில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பின்னர் விமானத்தில் தப்பியது தெரியவந்தது.

இந்த கும்பல், ராகுல்கான் கூறும் இடத்திற்கு சில மணிநேரத்திற்கு முன் வந்துவிடும். அதன்பின்னர் நள்ளிரவில் மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று அலாரம் வயரை துண்டிப்பார்கள். பின்னர் சிசிடிவி கேமரா மீது கருப்பு நிற ஸ்பிரே அடிப்பார்கள்.
அதன்பிறகு கேஸ் கட்டர் மூலம் சுமார் 4 நிமிடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடுவார்கள்.

ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ராகுல்கான், முஸ்தகீம்கான், ஷகீல்கான், வாஹித்கான் மற்றும் ஷாருக்பஷீர்கான் ஆகியோரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை தேடிவருகிறோம். இவர்கள் அனைவரும் யூடியூப் பார்த்து ஏடிஎம்மில் கொள்ளையடிப்பது எப்படி? என அறிந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

The post யூடியூப் பார்த்து துணிகரம் விமானத்தில் `பறந்து’ வந்து ஏடிஎம்மில் திருடிய கும்பல்: ராஜஸ்தானில் பதுங்கி இருந்த 5 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: