திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஓட்டலுக்குள் புகுந்து கேஸ் சிலிண்டரை மர்ம ஆசாமி திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போரால் நாடு முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக சிலிண்டர்கள் கிடைக்காதால் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பலர் விறகு மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறிவிட்டனர். இதனால் இவற்றின் விலையும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் ஒரு ஓட்டலில் இருந்து கேஸ் சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் சாலையில் அர்ச்சனா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலை அர்ச்சனா வழக்கம்போல ஓட்டலை திறப்பதற்காக வந்தார். அப்போது மின் சப்ளை துண்டிக்கப்பட்டிருந்தது.
மெயின் ஸ்விட்சை பார்த்தபோது அது ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் ஓட்டலின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் திருடன் புகுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஓட்டலில் வைத்திருந்த பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் ஏதாவது திருடு போயிருக்கலாம் என்று அர்ச்சனா முதலில் சந்தேகித்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அங்கு வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்த போது ஒரு மர்ம ஆசாமி உள்ளே நுழைந்து ஒரு சிலிண்டரை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அப்போதுதான் திருடன் நுழைந்தது எதற்காக என்பது அர்ச்சனாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
