நவீன உடை அணிந்து கொண்டு ‘பப்’ பார்ட்டிக்கு செல்வதால் மனைவி நடத்தை கெட்டவரா?: கணவரின் குற்றச்சாட்டை நிராகரித்த கர்நாடக ஐகோர்ட்

பெங்களூரு: நவீன உடைகளை அணிவதோ அல்லது பார்ட்டிகளுக்கு செல்வதோ ஒரு பெண்ணின் நடத்தையை தீர்மானிக்காது என கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத் தகராறு தொடர்பான வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தை விமர்சித்து அவர்களின் புகார்களை நீர்த்துப்போகச் செய்யும் போக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. குறிப்பாக, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் மனைவியின் உடை, பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக வலைதள செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, அவர் ‘கெட்ட நடத்தை’ கொண்டவர் என நீதிமன்றங்களில் வாதிடுவது தொடர்கதையாக இருந்தது. இந்நிலையில் தனது மனைவி ‘பப்’ பார்டிகளுக்குச் செல்வதாகவும், நவீன உடைகளை அணிவதாகவும் கூறி கணவர் தரப்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, மனுதாரரின் வாதங்களை முற்றிலும் நிராகரித்தார். ஒரு பெண் நவீன உடைகளை அணிவதோ அல்லது பொது இடங்களுக்குச் சென்று நடனமாடுவதோ சட்டப்படி குற்றமல்ல என்றும், அது அந்தப் பெண்ணின் குணாதிசயத்தை தவறாக சித்தரிக்க ஆதாரமாகாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் விவரங்களின்படி, வரதட்சணை கொடுமை தொடர்பான 498ஏ பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்கை எதிர்கொள்ள முடியாமல், மனைவியின் தனிப்பட்ட சுதந்திரத்தை கணவர் தரப்பு கேலி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கும் வரதட்சணை கொடுமைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறிய நீதிமன்றம், மனைவியின் நவீனமான போக்கு கணவர் குடும்பத்தினருக்கு கொடுமை செய்ய உரிமம் வழங்காது என எச்சரித்துள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், ‘ஒரு பெண் பப்களுக்குச் செல்வதாலோ அல்லது நவீன உடைகளை அணிவதாலோ அவர் ‘கெட்ட நடத்தை’ கொண்டவர் என்று கூறுவதை அருவருப்புடன் நிராகரிக்க வேண்டியது அவசியமாகும். தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை, அதை வரதட்சணை கொடுமை வழக்குகளில் ஒரு கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்க முடியாது’’ என்று முடித்தார்.

Related Stories: