புதுடெல்லி:தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் சமர்பித்துள்ளன. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செயல்படுவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒன்றிய அரசுக்கு சாதகமாக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகுதிவாய்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. விதிகளின்படி தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீசில் குறைந்தது மக்களவையில்100 எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவையில் 50 எம்பிக்களின் கையெழுத்தும் தேவையாகும்.
இதனை தொடர்ந்து சுமார் 193 எம்பிக்களின் கையெழுத்துடன் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று நோட்டீஸ் வழங்கினார்கள். இதில் 130 மக்களவை எம்பிக்களும், 63 மாநிலங்களவை எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த நடவடிக்கையை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளன.சில சுயேட்சை எம்பிக்களும் இந்த நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர்.
வரலாற்றிலேயே தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். தேர்தல் ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நோட்டீசில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் பதவியில் பாரபட்சமான நடவடிக்கை, தேர்தல் மோசடி விசாரணையை வேண்டுமென்றே தடுத்தல் மற்றும் வாக்குரிமை பறிப்பு உள்ளிட்ட புகார்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஒன்றிய பாஜ அரசுக்கு உதவும் வகையில் செயல்பட்டதாகவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கடந்த 75 ஆண்டுகளில், இந்தியாவில் 25 தலைமை தேர்தல் கமிஷனர்கள் பணியாற்றி உள்ளனர். அவர்கள் யார் மீதும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது இல்லை.
* அரசியலமைப்பின் 324(5) பிரிவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பதவி நீக்கம் செய்யப் பின்பற்றப்படும் அதே நடைமுறை அடிப்படையில் தான் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய பயன்படுத்த முடியும்.
* மற்ற தேர்தல் ஆணையர்களைப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனில், அது தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
* நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்கத் தீர்மானத்திற்கான அறிவிக்கை ஒரே நாளில் சமர்ப்பிக்கப்பட்டால், அந்தத் தீர்மானம் இரு அவைகளிலும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, எந்தவொரு விசாரணைக் குழுவும் அமைக்கப்படாது.
* இரு அவைகளிலும் அத்தீர்மானம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை அவைத்தலைவர் ஆகியோரால் கூட்டாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும்.
* இக்குழுவில், இந்தியத் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், இந்தியாவின் 25 உயர் நீதிமன்றங்களில் ஒன்றின் தலைமை நீதிபதி ஒருவர், மற்றும் ஒரு சிறப்புமிக்க சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெறுவர்.
* இக்குழுவின் விசாரணை நடைமுறைகள், சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் நீதிமன்ற விசாரணை நடைமுறைகளைப் போன்றே அமைந்திருக்கும்.
* தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், இக்குழுவின் முன் தோன்றித் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
* விசாரணைக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன், அந்த அறிக்கை அவையில் சமர்ப்பிக்கப்பட்டு பதவி நீக்கத் தீர்மானம் குறித்த விவாதங்கள் தொடங்கும்.
* நாடாளுமன்றம் இத்தீர்மானம் குறித்து விவாதிக்கும்போது, அவையறையின் நுழைவாயிலில் நின்றுகொண்டு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை குமாருக்கு உண்டு.
