12,000 சுயமரியாதை திருமணங்கள் பதிவு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆயிரம் விளக்கு எம்எல்ஏ நா.எழிலன் (திமுக) பேசுகையில், சுயமரியாதை திருமணம் குறித்து சார்பதிவாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வருமா, ஆன்லைன் மூலம் திருமண சான்றிதழ் பதிவு செய்ய வழிவகை செய்யப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்த வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, “சுயமரியாதை திருமணம் குறித்து 1955ம் ஆண்டு இந்து திருமண பதிவுச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது வரை அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, சுயமரியாதை திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

2018ம் ஆண்டு முதல் இந்நாள் வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுத் துறையினுடைய இணையதள பக்கத்தில் உள்சென்று திருமணப் பதிவிற்கு தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அதற்கு உரிய கட்டணத்தை செலுத்திய பின்னர், விண்ணப்பம் உருவாக்கப்படும். அதனை அச்சுப் பிரதி எடுத்து திருமண பதிவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழில் திருத்தம் தேவைப்படினும் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு நேரிலே வராமல் இணையம் வழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றிதழைப் பெறும் வசதியும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

The post 12,000 சுயமரியாதை திருமணங்கள் பதிவு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: